ஜிஎஸ்டி வசூல் கடந்த மார்ச் மாதத்தில் 1.06 லட்சம் கோடியாக உள்ளது.ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, மாதம் ஒரு லட்சம் கோடிக்கு மேல் வசூலிக்க வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. 

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் அபாரமாக  ₹1,06,577 கோடி வசூல் ஆகியுள்ளது. 

இதில் மத்திய ஜிஎஸ்டி ₹20,353 கோடி, மாநில ஜிஎஸ்டி ₹27,520 கோடி ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ₹50,418 கோடி, செஸ் வரி ₹8,286 கோடி.இதற்கு முந்தைய, பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி ₹97,247 கோடி வசூல் ஆகியிருந்தது. ஜிஎஸ்டி அறிமுகம் செய்ததில் இருந்து வசூல் ஆனதை விட, கடந்த மாத ஜிஎஸ்டி வசூல்தான் அதிகபட்ச அளவாகும். 

கடந்த ஆண்டு மார்ச்  வரி வசூலுடன் ஒப்பிடுகையில் இது 15.6 சதவீத வளர்ச்சி. கடந்த மாதம் 75.95 லட்சம் ஜிஎஸ்டிஆர் – 3பி படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி கணக்கிட்டு ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2018-19 நிதியாண்டில் மாதாந்திர சராசரி ஜிஎஸ்டி வசூல் ₹98,114 கோடி. இது இதற்கு முந்தைய ஆண்டை விட 9.2 சதவீதம் அதிகம். 

பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட போதும், வசூல் வளர்ச்சி  அடைந்து வந்துள்ளது. 2018-19 நிதியாண்டில் ஜிஎஸ்டி ₹11.47 லட்சம் கோடி வசூல் ஆகியிருந்தது.. இந்த ஆண்டு ஜனவரியில் ₹1.02 லட்சம் கோடி, பிப்ரவரியில் ₹97,247 கோடி வசூல் செய்யப்பட்டது.