தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருமழை தீவிரமடைந்து, பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. நேற்றிரவு மதுரை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த 24 மணிநேரத்தில் அரியலூர் திருச்சியில் அதிகபட்சமாக 11 செமீ மழை அளவு பதிவாகியுள்ளது. கரூரில் 10 செமீ மழையும், பெரம்பலூரில் 6 செமீ மழையும், விருதுநகரில் 5 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவண்ணாமலை, அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஜூலை 16ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும், தென்மேற்கு மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.