கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத் தான் தெரியும் என்றும், தமிழக அரசு கொரோனாவை ஒழிக்கத் தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை தினமும் 2000த்தை கடந்திருக்கும் நிலையில், இன்று 4ஆவது நாளாக தமிழகத்தில் 2396 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் ஏற்படாத புதிய உச்சம் இது.
இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,845ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் மட்டும் 38 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வேளச்சேரியில் காய்ச்சல் சிறப்புச் சோதனை முகாமை பார்வையிட்டப்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதல்வர் பழனிசாமி,
“கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத் தான் தெரியும். தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என்று கூறினார்.
மேலும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களால் தான் ஆரம்பத்தில் கொரோனா பரவியது. கொரோனாவை தடுக்கவே மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்களை சிரமப்படுத்த அல்ல. நோயை கட்டுப்படுத்த தான்.
மக்கள் வெளியில் நடமாடுவதை குறைத்தால், நோய் பரவலை குறைக்கலாம். கொரோனாவை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம். தமிழகத்தில் தான் அதிகபட்சமாக 83 பரிசோதனை மையங்கள் உள்ளன. தினமும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க: தமிழகத்தில் நாளை தோன்றும் 34% சூரிய கிரகணம்.. வெறும் கண்களால் பார்த்தால் பாதிப்பு
மேலும் சென்னையில் இருந்து வெளியே செல்பவர்களால் தான் பிற மாவட்டங்களில் கொரோனா பரவுகிறது. வெளியூர் செல்லாமல், சென்னை மக்கள் இங்கேயே தங்கியிருந்தால் தான் பரிசோதனை செய்ய முடியும். எல்லாவற்றையும் நாங்களே செய்ய முடியாது.
சுகாதாரமாக வாழ்ந்தால் நோய் வராது. மக்கள் பலர் முகக்கவசம் அணியாமல் ரோட்டில் செல்வதை டிவி செய்திகளில் படம் பிடித்துக் காட்டுகிறார்கள். இதை பார்க்கத்தான் செய்கிறார்கள், கடைப்பிடிப்பதே இல்லை. மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளியை அதிகப்படுத்தி, அரசு அறிவுரைகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.