பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா நடித்துள்ள சீமராஜா விநாயகர் சதுர்த்தி அன்று திரைக்கு வரவுள்ளது. மனம் கொத்திப் பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் இந்த வரிசையில் சீமராஜா படத்திற்கும் இமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயன் சீமராஜா மற்றும் கடம்பவேல் ராஜா என்று இரண்டு கதாபாத்திரங்களில், இரண்டு காலகட்டங்களில் நடக்கும் வகையில் கதையமைக்கப்பட்டுள்ளது. பழங்காலக் கதையில் சிவகார்த்திகேயன் மன்னராக நடித்துள்ளார். இது ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக அமைய இருக்கிறது.

கிராமப் பின்னணியில் காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் மிரட்டும் வில்லியாக தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வந்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை சிம்ரனும், முக்கிய கதாபாத்திரங்களில் நெப்போலியன், சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் படம் வெளியாவதால் நல்ல வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளரான ஆர்.டி.ராஜா, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சீமராஜா படத்தை இணையதள சேவை நிறுவனங்களின் உதவியுடன் சுமார் 3,500 இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட வாய்ப்பு உள்ளதாக அறிகிறேன். இதை அனுமதித்தால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும். எனவே, சீமராஜா படத்தை இணையதளங்களில் வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி, சட்ட விரோதமாக இணையதளங்கள் படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.

இயக்குனர் பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணியில், இதற்கு முன் வந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்கள் வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.