கொரோனா வைரஸ் சோதனை உபகரணங்களை வாங்குவதில் இந்தியா தாமதம் செய்துவிட்டது என்று மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12000த்தை தொட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பை கண்டுபிடிக்க தேவையான சோதனை உபகரணங்கள், மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் போதிய அளவில் இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன
இதுதொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது பதிவில், “கொரோனா வைரஸ் நோய் தொற்றிற்கான சோதனை உபகரணங்கள் வாங்குவதில் இந்தியா தாமதம் செய்துவிட்டது. அதனால், தற்போது, சோதனை உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
10 லட்சம் இந்தியர்களுக்கு வெறும் 149 சோதனைகள் மட்டுமே செய்யப்படுகிறது. லாவோஸ் நாடு (157), நைஜிர்(182) மற்றும் ஹோண்டரஸ்(162) ஆகிய நாடுகளின் நிலையில்தான் நாம் உள்ளோம். பெரிய அளவிலான சோதனைகள் தான் வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமான பங்கு வகிக்கும். ஆனால், அந்த முயற்சியில் தற்போது நாம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
சாப்பிட உணவில்லாமல் திண்டாடும் மருத்துவர்கள்-தமிழக அரசு விழிக்குமா..
முன்னதாக சோனியா காந்தி வெளியிட்டுள்ள வீடியோவில், போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாத சூழலிலும் நமது மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களும், தன்னார்வலர்களும் கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். துப்புரவு பணியாலர்கள் சுற்றுப்புறத் தூய்மையை உறுதிபடுத்திக் கொண்டிருக்கின்றனர்.
சில இடங்களில் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் மிகவும் வேதனை அளிக்கிறது. கொரோனா தொற்றுக்கு எதிராக முன்னின்று போராடும் வீரர்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்களின் செயல்பாடுகள் பலவீனம் அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஊரடங்கை சிறப்பான முறையில் அமல்படுத்திக் கொண்டிருக்கும் காவலர்களுக்கும் வாழ்த்துக்கள். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் பொதுமக்கள் ஊரடங்கை மிகவும் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்.
அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். ஆளுங்கட்சியாக அல்லது எதிர்க்கட்சியாக இருந்தாலும் காங்கிரஸ் கட்சி தனது தன்னலமற்ற சேவையை தொடர்ந்து அளிக்கும். உறுதியான நடவடிக்கைகள் மூலம், இந்த நெருக்கடியிலிருந்து நாடு விரைவில் மீண்டு வரும் என்று சோனியா காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.