இந்தியாவில் மத ரீதியான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டது, சகிப்புத்தன்மை மொத்தமாக குறைந்துவிட்டது என்று இந்தியாவை CPC நாடுகளின் பட்டியலில் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (USCIRF) சேர்த்ததற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

USCIRF என்று அழைக்கப்படும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் என்பது அமெரிக்க அரசின் கீழ் சுதந்திரமாக செயல்பட கூடிய ஆணையம். உலகம் முழுக்க மத ரீதியான தாக்குதல்கள் மற்றும் செயல்பாடுகளை இந்த ஆணையம் தீவிரமாக கண்காணித்து அது தொடர்பான பரிந்துரைகளை அந்நாட்டு அரசுக்கு இந்த அமைப்பு வழங்கும்..

தற்போது இந்தியாவை ”குறிப்பாக அக்கறை கொள்ள வேண்டிய நாடு – Country of Particular Concern (CPC)” என்ற பட்டியலில் சேர்த்துள்ளது. CPC என்பது சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் உருவாக்கும் ஒரு மிக முக்கிய பட்டியல். எந்த நாட்டில் எல்லாம் மோசமாக மத சுதந்திரம் உள்ளது, மத தாக்குதல்கள் உள்ளதோ அந்த நாடுகளை இப்பட்டியலில் இந்த ஆணையம் சேர்க்கும். இப்படி பட்டியலில் இருக்கும் நாடுகள் மீது அமெரிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் பரிந்துரை செய்யும்.

மேலும் வாசிக்க: இஸ்லாமியர்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்- பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சை

இந்த நிலையில் 2020ம் ஆண்டிற்கான USCIRF வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் மத ரீதியான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டது, சகிப்புத்தன்மை மொத்தமாக குறைந்துவிட்டது. அங்கு சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுகிறது. அந்நாட்டு மத்திய அரசு இதில் இணைந்து சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுகிறது. அதேபோல் அவர்களுக்கு எதிரான வெறுப்பு உமிழும் பேச்சுக்களை ஊக்குவிக்கிறது.

இந்தியாவில் பாஜக தலைவர்கள் நாடு முழுவதும் NRC மற்றும் CAA அமல்படுத்த திட்டமிடுகிறார்கள். இதனால் பலகோடி இஸ்லாமிய மக்கள் நாடுகளை, வீடுகளை இழக்க நேரிடும். பலர் குடியுரிமையை இழப்பார்கள்” என்று கூறியுள்ளது. மேலும், இந்தியா மீது கடுமையாக நடவடிக்கையை எடுக்க அமெரிக்காவிற்கு அந்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

அதன் அடிப்படையில், அமெரிக்க அரசு இந்தியா மீது பொருளாதார தடை, இந்திய அரசு அமைப்புகள் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை, இது போன்ற அதிகாரிகள், நபர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு மொத்தமாக தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளது.

மேலும் வாசிக்க: ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை பரப்பினால் விசா ரத்து, கைது- எச்சரிக்கப்படும் இந்திய வெளிநாட்டவர்கள்

கடைசியாக 2004ல் குஜராத்தில் கலவரம் நடந்த போது இதேபோல் இந்தியாவை CPC பட்டியலில் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் சேர்த்திருந்தது. அதன்பின் இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் CPC பட்டியலில் இந்தியாவை சேர்த்துள்ளது. இந்தியாவை போல பர்மா, சீனா, ஈரான், நைஜீரியா, வடகொரியா, பாகிஸ்தான், ரஷ்யா, சவுதி அரேபியா, சிரியா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், வியட்நாம் ஆகிய நாடுகளை இதே லிஸ்டில் அந்த ஆணையம் சேர்த்துள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து மத்திய வெளியுவுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவிற்கு எதிரான சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை நாங்கள் எதிர்கிறோம். இந்தியாவிற்கு எதிராக இவர்கள் தவறான இப்படி முடிவு எடுப்பது புதிது கிடையாது.

ஆனால் இந்த முறை, அவர்களின் கருத்துக்கள் எல்லை மீறி உள்ளது. இந்த ஆணையத்தில் இருக்கும் சில ஆணையர்கள் கூட இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த ஆணையம் தனது பணியில் நேர்மையாக, சரியாக இனியாவது செயல்படும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.