சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்கள் தேர்வின்றி அடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சி செய்யப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம், புதுச்சேரி, உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகள் மற்றும் அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் மட்டும் ஒத்தி வைத்து, 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் என அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியிருப்பதாவது, ‘கரோனா வைரஸ் பாதிப்பின் நிலைமையை கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் படிக்கின்ற மாணவர்கள், அடுத்த வகுப்புக்கு தேர்வின்றி தேர்ச்சி செய்யும்மாறு சிபிஎஸ்இ.,க்கு அறிவுறுத்தப்படுகிறது.

9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள், அவர்களுடைய பருவத்தேர்வு, பயிற்சி தேர்வு, செய்முறைத் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அடுத்த வகுப்புகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.