மதுரை நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் மருத்துவக்கல்லூரி அறைகளில் வைக்கப்பட்டு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனாலும் அதை மீறி கடந்த 20ம் தேதி பெண் தாசில்தார் உள்பட 4 அலுவலர்கள் அறைக்குள் நுழைந்து, 4 மணி நேரம் தங்கி இருந்து ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்த விவகாரம் பரபரப்பூட்டியது.
 
இதில் பெண் தாசில்தார் சம்பூரணம் மற்றும் 3 அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பாக மாநில கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி, கடந்த 22ம் தேதி மதுரை வந்து தாசில்தார் மற்றும் மதுரை கலெக்டர் நடராஜனிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.
 
 
இதன் இடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் தாக்கல் செய்த மனுவில், “மதுரை மக்களவைத் தொகுதியில், பெண் வட்டாட்சியர் சம்பூரணம் உள்ளிட்ட 4 அலுவலர்கள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்குள் சட்டவிரோதமாகச் சென்று அங்கிருந்து சில ஆவணங்களையும் நகல் எடுத்துள்ளனர்.
 
இதுதொடர்பாக புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் முறையாக விசாரணை நடத்தவில்லை. எனவே முறையான நடவடிக்கை எடுக்காத மதுரை மாவட்ட ஆட்சியரை உடனடியாக மாற்ற வேண்டும்’ என கோரியிருந்தார்.
 
இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
 
வழக்கு இன்று விசாரணகைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையத்திடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.
 
மதுரை ஆட்சியரின் உதவியாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது?
வட்டாட்சியருக்கு உள்ள அதிகாரம் தலைமை தேர்தல் அதிகாரிக்கு இல்லையா?
வட்டாட்சியர்கள் எது செய்தாலும் கண்டுகொள்ளாமல் தலைமை தேர்தல் அதிகாரி இருந்துவிடுவாரா?
 
என்ற கேள்விக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி ஒரு போஸ்ட் மேன் மாதிரிதான், தலைமைத் தேர்தல் அதிகாரியால் யார் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது என தேர்தல் ஆணைய வழக்கறிஞர் பதிலளித்துள்ளார்.
 
யார் வேண்டுமானாலும் நுழையலாம் என்றால் பாதுகாப்பே இல்லை என்றுதான் அர்த்தம் என்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு மாவட்ட ஆட்சியர் தினமும் சென்றாரா? நேர்மையான தேர்தலை நடத்துவதாக கூறும் ஆணையம் இதிலும் அப்படித்தானே செயல்பட்டிருக்க வேண்டும் என்றனர்.
அப்போது, மதுரை தொகுதி வாக்கு எண்ணப்படவுள்ள மையத்தில் சில பாதுகாப்புக் குறைபாடுகள் உள்ளது என்பது கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி பாலாஜி நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் தெரிவித்தார்.
 
இதனையடுத்து நீதிபதிகள், மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் சொன்னதால் வட்டாட்சியர் உள்ளிட்டோர் சென்றுள்ளனர். அப்படி இருக்கும்போது அந்த உதவியாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினர்.
 
இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணைய வழக்குரைஞர், தலைமைத் தேர்தல் அதிகாரியின் பணி என்பது ஒரு தபால்காரர் போன்றது. அவரால் யார் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது என்று தெரிவித்தார் .
 
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் உள்ளிட்ட தேர்தல் பணி அதிகாரிகளை கூண்டோடு இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட இருந்தோம்.
 
ஆனால், மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரை இடமாற்றம் செய்து விட்டதாகவும் நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் தெரிவித்தார். இதை பதிவு செய்கிறோம்.
 
மேலும், மதுரை மாவட்ட புதிய ஆட்சியராக எஸ்.நாகராஜனை நியமித்துள்ளதாகவும், அதேபோல, புதிய உதவி தேர்தல் அதிகாரியாக சாந்தகுமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனைப் பதிவு செய்து கொள்கிறோம்.
 
அதேநேரம், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் நடராஜன் உள்ளிட்டோர் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
 
இதற்கிடையே அரசு ஊழியர் சங்கத்தினர்,‘கலெக்டர் உத்தரவின்றி வாக்கு எண்ணும் மையத்தில் தாசில்தார் சென்றிருக்க மாட்டார். அவரை பலிகடா ஆக்குகிறார்கள்’ என்று தீர்மானம் நிறைவேற்றி இருப்பது கலெக்டரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
 
அடிக்கடி பேட்டி அளித்து பரபரப்பூட்டும் மதுரை அமைச்சர்கள் இந்த விவகாரத்தில் கருத்து எதுவும் கூறாமல் மவுனம் சாதிக்கின்றனர்.