83வது நாளான இன்று உஜ்ஜைனில் இந்திய ஒற்றுமை பாத யாத்திரையை மேற்கொண்டுவரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உடன் உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத், பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் ஆகியோர் இணைந்து கொண்டனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘பாரத் ஜோடோ யாத்ரா (இந்திய ஒற்றுமை பயணம்)’ என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி துவங்கிய இந்த பாதயாத்திரையை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ராகுல் காந்தியின் இந்த நடைபயணம் தமிழகம், கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மாநிலங்களைக் கடந்து மத்தியப் பிரதேசத்துக்குள் நுழைந்துள்ளது. இன்று (01.12.2022) பாதயாத்திரையின் 83வது நாளாகும்.
இந்நிலையில் இன்று காலை உஜ்ஜைன் நகரில் யாத்திரையில் ஈடுபட்ட ராகுல் காந்தி உடன் உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத், பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் ஆகியோர் இணைந்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அண்மையில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறித்து போட்டி தேர்வுக் குழு தலைவர் நடாவ் லேபிட் கூறிய கருத்து பெரும் சர்ச்சையான நிலையில், அவருக்கு ஆதரவுக்குரல் கொடுத்திருந்தவர் தான் இந்த பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர்.
இது தொடர்பாக பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இந்த உலகுக்கே இந்த விஷயம் இப்போது வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது” என்று நடாவ் லேபிட் கருத்தை ஆதரித்து பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாதயாத்திரையின்போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “இந்த நடைபயணத்தால் மிகப்பெரிய மனநிறைவான சம்பவங்கள் பல நடந்தன. இந்த பாரத் ஜோடோ யாத்திரையால், என்னுடைய பொறுமை அதிகரித்துள்ளது.
என்னை யாரேனும் தள்ளினாலும், இழுத்தாலும் என்னை 8 மணி நேரம் துன்புறத்தினாலும் நான் எரிச்சலடையமாட்டேன். மேலும் நடைபயணத்தின்போது, வலியை உணரந்தேன், அதனை அனுபவிக்க வேண்டும் என்பதால், அதை கைவிடவில்லை.
நடைபயணத்தின் மூலம் என்னால் பிறர் கூறுவதை காது கொடுத்து சிறப்பாக கேட்க முடிகிறது. என்னிடம் யாரேனும் வந்து ஏதாவது கூறினால், நான் அதிகமாக கவனிக்கிறேன். இதுபோன்ற விஷயங்கள் எனக்கு மிகவும் நன்மையளிக்கின்றன.
என் முழங்கால்களில் ஏற்கெனவே காயம்பட்டு ஆறிய இடங்களில் இருந்து அதிகமான வலியை நான் நடைபயணம் தொடங்கியபோது உணர்தேன். இந்த வலியால் எனக்கு அசவுகரியங்கள் நடந்தாலும், என்னால் நடக்க முடியும் என்று நம்பினேன். இப்போது வலி என்ற விஷயத்தைப் பற்றி கேள்வியே இல்லை.
இந்த நடை பயணத்தின்போது சிறிய குழந்தை எங்களுடன் சேர்ந்து நடந்தார். 7 வயதிருக்கும் என்னிடம் வந்து ஒரு கடிதத்தை அந்த சிறுமி வழங்கினார். அந்த குழந்தை சென்றபின் அவர் அளித்த கடிதத்தை படித்துப் பார்ததேன். அதில் நீங்கள் தனியாக நடக்கிறேன் என்று எண்ணாதீர்கள். நான் உங்களுடன் வருகிறேன்.
என்னால் உங்களுடன் சேர்ந்து நடக்க முடியும், ஆனால் என் பெற்றோர் அனுமதிக்க மறுக்கிறார்கள். ஆனால், நான் உங்களுடன் நடப்பேன் என்று எழுதியிருந்தார். இதுபோன்ற ஆயிரக்கணக்கான உதாரணங்களை இந்த நடைபயணத்தில் கூற முடியும். ஆனால், இந்த உதாரணம்தான் என் மனதில் உடனுக்குடன் வந்தது” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.