முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறான ‘800’ படத்தில் நடிக்காமல் விஜய் சேதுபதி தவிர்க்க வேண்டும் என்று, கவிஞர் வைரமுத்து, இயக்குனர் பாரதிராஜா, தமிழ்தேசியவாதிகள், படைப்பாளிகள் மற்றும் அரசியல் கட்சியினர் என பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து வைரமுத்து தனது பதிவில், “கலையாளர் விஜய் சேதுபதிக்கு… சில நேரங்களில் செய்து எய்தும் புகழைவிடச் செய்யாமல் எய்தும் புகழே பெரிதினும் பெரிது செய்யும். நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள். வளர்பிறையில் கறை எதற்கு? இன உரிமைக்காகக் கலை உரிமையை விட்டுக் கொடுப்பதே விவேகம்; நீங்கள் விவேகி” என்று கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.
கலையாளர்
விஜய் சேதுபதிக்கு…சில நேரங்களில்
செய்து எய்தும் புகழைவிடச்
செய்யாமல் எய்தும் புகழே
பெரிதினும் பெரிது செய்யும்.நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள்.
வளர்பிறையில் கறை எதற்கு?இன உரிமைக்காகக்
கலை உரிமையை
விட்டுக் கொடுப்பதே விவேகம்;
நீங்கள் விவேகி.@VijaySethuOffl— வைரமுத்து (@Vairamuthu) October 15, 2020
முன்னதாக, இயக்குனர் பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில், “மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால், பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளனர். அதற்கு இயல்பான, யதார்த்தமான பேச்சும் கடைக்கோடி மக்களின் எண்ணப் பிரதிபலிப்புமே காரணம். இன்னும் நீண்டு செல்லும் இந்தப் பயணத்தில் மேலும் புகழ் பெறவே வாழ்த்துகிறேன்.
தாங்கள் செய்யவிருக்கும் ‘800’ என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றிய பயோபிக் படமாக அது உருவாகப் போவதாக அறிந்தேன். நம் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்தபோது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா. சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர்.
விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன்?. எத்தனையோ துரோகங்களை எம்மினம் கடந்து வந்துள்ளது. எங்களைப் பொறுத்தவரை முத்தையா முரளிதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான். எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதைத் தவிர்க்க முடியுமா பாருங்கள். தவிர்த்தால் எப்போதும் எம் ஈழ மக்களின் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவு கொள்ளப்படுவீர்கள்.
எங்களைப் பொறுத்தவரை அவர் இனத் துரோகி. துரோகிகளை ஒரு போதும் தமிழினம் மன்னிக்க இயலாது. ஒரு போராளியின் தியாகம், ஆயிரம் முத்தையா முரளிதரன் வந்தால் கூட ஈடு செய்யமுடியாது” என்று பாரதிராஜா தெரிவித்திருந்தார்.
தமிழ் சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சியினர், மற்றும் தமிழ்தேசியவாதிகள், படைப்பாளிகள் என பலரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால், ‘800’ படத்தில் நடிப்பது குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு எடுக்கப்படும் என நடிகர் விஜய்சேதுபதி அறிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க: முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு ‘800’ படத்தில் விஜய்சேதுபதி