சென்னை- சேலத்தை இணைக்கும் வகையில் 277 கிலோ மீட்டர் தூர பசுமை வழிச்சாலையை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. இந்த பசுமை வழிச்சாலை சென்னையிலிருந்து காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 159 கிராமங்களின் இடையே அமைக்கப்பட உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை அறிவிப்பாணையின் அடிப்படையில் சேத்துப்பட்டு, செங்கம், வந்தவாசி, செய்யாறு, போளூர், திருவண்ணாமலை தாலுகாக்களில் உள்ள 7,237 விவசாயிகளுக்கு சொந்தமான விளை நிலங்களை கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதையடுத்து, இந்த பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் நிர்வாகி சுந்தரராஜன், வக்கீல் ஏ.பி.சூரியப்பிரகாசம், வக்கீல் வி.பாலு ஆகியோர் தனித்தனியாக மனுத் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், முதன்முதலாக சாலை வழித்தடத்தில் உள்ள நிலத்தின் உரிமையாளரான தர்மபுரியைச் சேர்ந்த பி.வி.கிருஷ்ணமூர்த்தி இத்திட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாசும் இந்த திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். இதேபோல், 8 வழி சாலை திட்டத்திற்கு எதிராக வக்கீல் சுரேஷ் குமார், யுவராஜ் ஆகியோரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானிசுப்பராயன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு வந்தபோது,
மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபால், உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், சிறப்பு அரசு பிளீடர் திருமாறன், மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் என்.எல்.ராஜா, தியாகராஜன், வக்கீல்கள் கே.பாலு, கனகராஜ் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டார்கள்.
அப்போது, 8 வழி பசுமைச்சாலை திட்டம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் விதமாக துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்று நீதிபதியிடம் தெரிவித்த அட்வகேட் ஜெனரல் அந்த துண்டுப்பிரசுரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். துண்டு பிரசுரத்தை படித்து பார்த்த நீதிபதிகள், விவசாயிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்ற மாட்டோம் என்ற உத்தரவாதமும், அவர்களின் பயத்தை போக்கும் விதமாக எந்த விளக்கமும் துண்டுப் பிரசுரத்தில் இடம் பெறவில்லையே. இந்த 8 வழிச்சாலை திட்டம் சிறப்பானது என்று திட்டம் மட்டுமே புகழப்பட்டுள்ளது. ஒரு மரத்தை வெட்டினால் 10 மரம் வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக, தமிழகத்தில் ஏராளமான மரங்கள் வெட்டப்படுகின்றன. அதற்கு பதிலாக வைக்கப்படும் மரங்களை பராமரிப்பதில்லை. அந்த மரங்களுக்கு தண்ணீர் கூட சரிவர ஊற்றுவதில்லை. அதனால் அந்த மரங்களும் வளர்ச்சியடைவதில்லை என்றனர். இதற்கு அட்வகேட் ஜெனரல், நிலத்தின் உரிமையாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற மாட்டோம் என்று இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே நான் நீதிமன்றத்தில் தெரிவித்து வருகிறேன். நிலங்கள் எல்லாம் அதன் உரிமையாளரின் வசம்தான் உள்ளது. நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்படவில்லை என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர்.
அதில், “சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலைத் திட்டத்தினால் தங்கள் நிலம் ஆர்ஜிதம் செய்யப்படலாம் என்று கருதப்படும் நிலங்களின் உரிமையாளர்கள் ஒருவித அச்சத்தில் உள்ளனர். திட்டத்திற்காக தங்களை வலுக்கட்டாயமாக அரசு வெளியேற்றி விடும் என்றும் அவர்கள் பயப்படுகிறார்கள். ஆனால், அரசு அவ்வாறு செய்யாது என்று தமிழக அட்வகேட் ஜெனரல் உத்தரவாதம் தந்துள்ளார். எனவே, இந்த நிலையில், நீதிமன்றம் ஒரு உத்தரவு ஒன்றை பிறப்பிக்கிறது. அதாவது, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, நிலத்தின் உரிமையாளர்கள் யாரையும், நிலத்திலிருந்து அப்புறப்படுத்தக்கூடாது; மரங்களை வெட்டவும் கூடாது என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடுகிறோம்.
இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் 11ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர். இந்த உத்தரவு வெளியானதும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்ட மக்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இந்த இடைக்கால தடை உத்தரவை வரவேற்றுள்ளனர்.சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதை வரவேற்ப்பதாகவும் அப்பாவி மக்கள் மற்றும் விவசாயிகளின் நிலத்தை அராஜக போக்கில் கைப்பற்றிய அதிமுக அரசுக்கு நீதிமன்றம் தக்க பாடம் புகட்டியிருக்கிறப்பதால் இனியாவது மாற்றுவழி குறித்து சிந்திக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் குறிபிட்டுள்ளார்
கடந்த நான்கு மாதமாக கண்ணீர் விட்ட அப்பகுதி விவசாய மக்கள் ., தமிழக அதிமுக மற்றும் மத்திய பாஜக அரசுக்கு சாபம் கொடுத்து வந்த நிலையில் இப்போது மகிழ்ச்சியில் உள்ளனர் ஆனால் சற்றும் எதிர்பாராத இந்த தடை அதிமுக மற்றும் பாஜக வட்டாரத்தை சோகமுற செய்த்துதுள்ளதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன ..