44வது சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் உலகின் இளம் செஸ் வீராங்கனையான பாலஸ்தீனத்தை சேர்ந்த ராண்டா செடர் (8 வயது), தன்னை எதிர்த்து விளையாடியவரை 39 நகர்வுகளில் வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
சென்னையில் நடைபெற்றுவரும் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார் பாலஸ்தீனத்தில் உள்ள ஹெப்ரானைச் சேர்ந்தவ ராண்டா செடர். உலக சாம்பியன்கள், அனுபவம் மிக்க கிராண்ட் மாஸ்டர்களுக்கு மத்தியில் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் ராண்டாவின் வயது வெறும் எட்டு.
உலகின் இளம் செஸ் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ள ராண்டா செடருக்கு, 5 வயதில் இருந்தே அவரது தந்தை செஸ் விளையாட கற்றுக் கொடுத்துள்ளார். சில நாட்களில் அதுவே அவரது வாழ்க்கையாக மாறியது.
பல போட்டிகளில் பங்கேற்றுள்ள ராண்டா, பாலஸ்தீன பெண்கள் சாம்பியன்ஷிப்பில் 2வது இடத்தைப் பிடித்ததன் மூலம் செஸ் ஒலிம்பியாட் அணிக்கு தகுதி பெற்று தற்போது மிகப் பெரிய அரங்கில் தன் திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
நேற்று (30.07.2022) கொமோரோவின் ஃபஹிமா அலி முகமதுவை 39 நகர்வுகளில் வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார் ராண்டா. பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் அணியைச் சேர்ந்த எமான் சவான் (15 வயது), சாரா அல்மௌரி (16 வயது) மற்றும் தாக்வா ஹமோரி (16 வயது) ஆகியோருடன் கலந்துகொண்டார் ராண்டா.
இவர்கள் அனைவரின் பயணமுமே மிகவும் சுவாரஸ்யமானது. இவர்கள் அனைவருக்கும் இதுதான் முதல் செஸ் ஒலிம்பியாட். இதுகுறித்து சவான் பேசும்போது, ராண்டா தன் 5வது வயதில் செஸ் விளையாடத் தொடங்கினார். அவர் தந்தை தான் அவருக்கு இந்த விளையாட்டை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.
அப்போது அவருக்கு செஸ் பிடித்துவிட்டது. செஸ் போர்டு விளம்பரங்களுக்கு போஸ் கொடுக்க நாற்காலியின் மீது முட்டி போட்டு தான் ராண்டா அமர வேண்டி இருந்தது என்று சொல்லி சிரித்தார் சவான். ராண்டாவை பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதில் நாங்கள் கூடுதல் பொறுப்பை உணர்கிறோம். அவர் எப்போதும் எங்களுடன் தான் இருப்பார் என்று மூவரும் ஒரே சேர கூறினார்கள்.
சிறுமியாக இருந்தாலும் செஸ் அரங்கில் பட்டையைக் கிளப்புகிறார் ராண்டா செடர். பாலஸ்தீன பெண்கள் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றார் ராண்டா. அவர் வயதுப் பிரிவில் உலகின் மிகச் சிறந்த வீரர்களுள் ஒருவர் ராண்டா செடர்.
ராண்டாவின் சகோதரர் முகமது செடெரும் ஒரு செஸ் வீரர் தான். 13 வயதிலேயே அவர் FIDE மாஸ்டர் பட்டம் வென்றவர். அவர் இப்போது பாலஸ்தீன ஆண்கள் அணிக்கு விளையாடி வருகிறார். அவர் ராண்டாவுக்கு சில மூவ்கள் கற்றுக் கொடுத்தார். ராண்டாவின் தந்தை தான் பாலஸ்தீன அணியின் கேப்டன் என்று ராண்டாவின் குடும்பத்திலேயே செஸ் இருப்பதைப் பற்றிக் கூறியிருக்கிறார் சவான்.
இங்கு இருப்பவர்களிலேயே இளம் வீரராக இருப்பது ராண்டாவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் இங்கு இருப்பதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறார். பிரபலமாக இருப்பதை அவர் மிகவும் விரும்புகிறார் என்று கூறுகிறார் அல்மோரி.
பாலஸ்தீனத்தில் இருக்கும் சூழ்நிலையில், இங்கு வருவது மிகவும் சாதாரன விஷயமாக இருக்கவில்லை. அங்கிருந்து ஜோர்டன், அதன்பிறகு பஹ்ரைன் சென்று அதன்பிறகு தான் இந்தியா வந்தோம். பாலஸ்தீனத்தில் எங்களுக்கு அதிக தொடர்களும் இல்லை.
எதிர்காலத்தில் எங்கள் நாட்டிலிருந்து நிறைய கிராண்ட் மாஸ்டர்கள் உருவெடுப்பார்கள் என்று நம்புகிறோம். நாங்கள் நால்வரும் எதிர்கால சாம்பியன்களாக இருக்கவேண்டும் என்பதே என் ஆசை” என்று கூறியிருக்கிறார் ஹமோரி.
செஸ் விளையாட்டில் பெண் கிராண்ட் மாஸ்டராக ஆகவேண்டும் என்ற லட்சியத்துடன் காய்நகர்த்தி வரும் ராண்டா-வுக்கு, 26 ஆண்டுகள் உலகின் நெம்பர் 1 செஸ் வீராங்கனையாக விளங்கிய ஹங்கேரியைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ஜூடிட் போல்கரை இந்தியாவில் நடைபெறும் போட்டியின் போது சந்திக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது.