உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் மிலாடு நபி பண்டிகையின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட 3 பேர் மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நொய்டாவில் முகமது ஜாபர், சமீர் அலி, அலி ராஜா ஆகிய மூவரும் கடந்த 20 ஆம் தேதி நடந்த மிலாது நபி ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிடும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது.

இதனையடுத்து மூவர் மீதும் தேசதுரோக வழக்குப் பதிவு செய்து, கைது செய்துள்ளதாக நொய்டாவில் உள்ள செக்டார் 20 காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேரும் முதலில் ஐபிசி 153ஏ பிரிவிலும் பின்னர் 124 ஏ பிரிவிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் தேசதுரோக வழக்குத் தொடரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக துபாயில் நடக்கும் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் கடந்த 24 ஆம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது. பாகிஸ்தான் அணியின் வெற்றியை வெடி வைத்து கொண்டாடியும் சமூக வலைத்தளங்களில் புகழ்ந்தும் பலர் கொண்டாடினர்.

இதனையடுத்து இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பாயும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டியின்போது பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடிய காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் 3 பேர் மீதும் தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 3 மாணவர்களும் ஆக்ராவில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.