மாவோயிஸ்ட்டுகள் பாணியில் கான்பூர் போலீசார் மீது கொடூர தாக்குதல் நடத்தி 8 போலீசாரை கொன்ற தாதா விகாஷ் துபே மீது இதுவரை 60 க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வரும் தாதா விகாஸ் துபே, விக்ரு கிராமத்தில் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. விகாஸ் துபேவை கைது செய்ய கடந்த வியாழக்கிழமை இரவு 25 போலீசார் கொண்ட குழு சென்றுள்ளனர். அப்போது காவல் துறையினருக்கும் விகாஸ் துபே கோஷ்டிக்கும் இடையே மோதல் நடைபெற்றது.

இந்த சம்பவத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் தேவேந்திர மிஸ்ரா உட்பட 8 காவல் துறையினர் கொல்லப்பட்டனர். 4 காவலர்கள் காயம் அடைந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

படுகொலை செய்யப்பட்ட போலீசாரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், மிக கொடூரமாக கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களால் போலீசார் கொல்லப்பட்டுள்ளதாக கூறி அதிர்ச்சி அடைந்தனர். இதன் உச்சமாக மாவோயிஸ்டுகள் எப்படி போலீசாரை சித்ரவதை செய்து கொடூரமாக படுகொலை செய்வார்களோ அதே பாணியில் கான்பூர் கேங்கும் அரங்கேற்றியிருக்கிறது என்கிற பகீர் தகவலையும் வெளியிட்டுள்ளனர்.

விகாஸ் துபேவுக்கு போலீசார் செல்வது குறித்து முன்னரே தகவல் கொடுத்த காவல் நிலைய அதிகாரி வினய் திவாரி பணியில் இருந்து தற்போது சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே விகாஸ் துபே மீது கொலை வழக்கு பதிவு செய்ய மறுப்பு தெரிவித்து இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொலை, கொள்ளை, கடத்தல் மட்டுமில்லை. நில ஆக்கிரமிப்பிலும் ஈடுபடும் விகாஸ் துபே கேங், 30 ஆண்டுகளாக போலீஸாரிடம் அகப்படாமல் நிழல் உலக தாதாவாக வலம் வருகிறார்கள். இவர்கள் இதற்கு முன்பும் தற்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் இருந்த அமைச்சர் சந்தோஷ் சுக்லாவை காவல் நிலையத்திற்குள் புகுந்து சுட்டுக் கொன்றுள்ளார்.

விகாஸ் துபேக்கு ஆளும் பாஜக கட்சிகளிலும் செல்வாக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோதே, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி நகர் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: மாம்பழம் பறித்ததால் ஆத்திரம்.. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முன்னாள் ராணுவ வீரர்…

இதனிடையே விகாஸ் துபே மற்றும் அவரது உதவியாளர்கள் ஏ.கே .47, இன்சாஸ் துப்பாக்கி மற்றும் மூன்று கைத்துப்பாக்கிகளை போலீசாரிடம் பறித்துள்ளனர். இதனையடுத்து கான்பூரின் பித்தூர் பகுதியில் உள்ள ரவுடி விகாஷ் துபேவின் வீட்டில் சோதனை நடத்திய கான்பூர் போலீசார் அங்கு பதுங்கு குழிகளில் இருந்து துப்பாக்கிகள், வெடிமருந்துகள் உள்பட ஏராளமான ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர். அப்பகுதியை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் விகாஷ் துபேவின் வீடும் காவல் துறையினரால் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது.