மாம்பழம் பறித்ததால் ஆத்திரம் அடைந்த முன்னாள் ராணுவ வீரர் அர்ஜுன் மிஸ்ரா என்பவர், 14 வயது சிறுமி ஜோதியை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள படார் கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரர் அர்ஜுன் மிஸ்ரா அவருக்குச் சொந்தமாக மாம்பழத்தோட்டத்தில் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அவர் தோட்டத்திற்கு மாம்பழம் பறிக்கச் சென்றுள்ளார்.

அப்போது அர்ஜுன் மிஸ்ரா, மாம்பழம் பறித்ததற்காகச் சிறுமியை மிரட்டியுள்ளார். தொடர்ந்து கோபம் தீராமல் சிறுமி என்றும் பாராமல் அவரைக் கட்டி வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் சிறுமி வெளியே சொல்லிவிடுவார் என்ற அச்சத்தில் கொலை செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.

மகளைக் காணாமல் தவித்த பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அத்துடன் உறவினர்களுடன் சேர்ந்து பல இடங்களில் தேடியுள்ளனர். அச்சிறுமி கடைசியாக மாம்பழம் பறிக்கச் சென்றதை அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். உடனே கிராம மக்களுடன் அங்குச் சென்று தேடியபோது, தோட்டத்தின் அருகேயுள்ள ஒரு முட்புதரில் அச்சிறுமி கொலை செய்யப்பட்டு இறந்த நிலையில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பழத்தோட்ட உரிமையாளர் அர்ஜுனைத் தேடிச் சென்றனர். அதற்குள் அர்ஜுன் தப்பியோடி விட்டார். இதனால் பொதுமக்கள் அர்ஜூனின் மனைவியைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். மேலும் தோட்டத்திலிருந்த மரங்களையும் வெட்டி சாய்த்துள்ளனர்.

மேலும் வாசிக்க: ‘நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்னு சும்மா சொல்லிட்டுப் போகல’.. கொந்தளித்த ஹர்பஜன் சிங்

ஆனால் பிராமண வகுப்பைச் சார்ந்த அர்ஜுன் மிஸ்ராவை காப்பாற்ற, தனது மகள் மின்சார அதிர்ச்சியால் இறந்துவிட்டதாகக் கூறி போலீஸார் உண்மைகளை மாற்ற முயற்சிப்பதாக சிறுமி ஜோதியின் தந்தை புகார் கூறியுள்ளார். அர்ஜுன் மிஸ்ராவால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஜோதிக்கு நீதி கோரி பலரும் ட்விட்டரில் ( #JusticeForJothi ) தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக ஜேடியு கட்சி தலைமையிலான ஆளும் கட்சியின் உதவியைப் பயன்படுத்தியே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற அர்ஜுன் மிஸ்ரா தப்பியோடியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் இதுதொடர்பாக பூனம் தேவியை போலீசார் கைது செய்துள்ளனர், ஆனால் முக்கிய குற்றவாளியான அர்ஜுன் மிஸ்ரா தலைமறைவாக உள்ளார். கொல்லப்பட்ட சிறுமி ஜோதியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.