இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர் அகமது அப்துல் ரஹ்மான் அல் பன்னா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் நேசக்கரம் நீட்டும் வகையில் இந்தியாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் 7 மெட்ரிக் டன் மருத்துவ பொருட்களை அனுப்புவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது இந்தியா முழுவதும் சுமார் 7,000 மருத்துவப் பணியாளர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே பல ஆண்டுகளாக உள்ள நட்பு மற்றும் சகோதரத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் இந்த மருத்துவப் பொருட்கள் தரப்படுவதாக அகமது அப்துல் ரஹ்மான் அல் பன்னா கூறினார்.
மேலும் வாசிக்க: மோடியின் அரசை புறக்கணிக்கிறதா அமெரிக்கா..மோடியை Unfollow செய்த ட்ரம்ப்
உலகளவில் கொரோனா வைரஸை எதிர்கொண்டு அதில் எப்படி வெற்றிபெறுவது என்பது தான் பிரதான கவலையாக உள்ளது. இந்த சூழலில் கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து வரும் நாடுகளுக்கு, நெருக்கடி நிலையை சமாளிக்கவும், அதன் முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஐக்கிய அரபு அமீரகம் உதவிக்கரம் நீட்டி வருவதாகவும் தெரிவித்தார்.
இதுவரை உலகளவில் 34 நாடுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் 348 மெட்ரிக் டன் மருத்துவ பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது உலகம் தழுவிய அளவில் 3,48,000 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.