இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் 60 ரன்களில் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியது.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 246 ரன்களில் சுருண்டது. பின்னர் ஆடிய இந்தியா, புஜாராவின் சதத்தின் (132 ரன், நாட்-அவுட்) உதவியுடன் முதல் இன்னிங்சில் 273 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

இதையடுத்து 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, சரிவை சமாளித்து நேற்றை ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து 233 ரன்கள் முன்னிலை பெற்றது.

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அடுத்த இரண்டு விக்கெட்களை இழந்தது. 96.1 ஓவரில் 271 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் 27 ரன்கள் பின்தங்கியிருந்ததால், இங்கிலாந்து 244 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி சார்பில் முகமதுஷமி அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விளையாடிய இந்தியா 3 விக்கெட்களை தொடர்ச்சியாக இழந்தது. தவான், ராகுல் மற்றும் புஜாரா வரிசையாக வெளியேறினர்.ஆண்டர்சன் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களை வெளியேற்றினார்

இதனிடையே கேப்டன் கோலியும், ரகானேவும அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். இருப்பினும் அணியின் ஸ்கோர் 123 ஆக இருக்க, அரை சதம் கண்டிருந்த கோலி (58 ரன்கள்), மொயீன் அலி பந்து வீச்சில் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியாவும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, ரிஷாப் பாண்ட் 18 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இந்திய அணி ரகானேவை மலை போல் நம்ப, அவரும் 51 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 184 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மொயீன் அலி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியது.