சென்னையை அடுத்து ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991ம் ஆண்டில் குண்டுவெடிப்பு மூலம் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன், முருகன், நளினி ஆகிய 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசே முடிவு செய்யலாம் என்ற உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய 4 பேருக்கும் 1999ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதில் ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தமிழக அரசின் முடிவின் படி 2000ம் ஆண்டில் நளினியின் கருணை மனுவை ஏற்ற தமிழக ஆளுநர், அவரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டார்.
இதன்பின்னர் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் குடியரசுத்தலைவர் நீண்ட காலம் எடுத்துக்கொண்டதால் 2012ல் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது உச்சநீதிமன்றம்.
இதையடுத்து கடந்த 2014ம் ஆண்டில் இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு எடுத்தது. இதற்கு ஒப்புதல் அளிக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியது.
ஆனால், சிபிஐ விசாரித்த வழக்கில் குற்றவாளிகளை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசிற்கு இல்லை என்று கூறி, 7 பேரை விடுவிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசின் கடிதம் குறித்து மூன்று மாதங்களில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது. ஆனால், 7 பேரையும் விடுதலை செய்வதை ஏற்க முடியாது என்று மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறிய நீதிபதிகள், விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என்றும், பரிந்துரையின் மீது முடிவெடுக்கும் முழு அதிகாரம் ஆளுநருக்கு உண்டு என்றும் கூறிய நீதிபதிகள், மத்திய அரசின் வழக்கை முடித்து வைத்தனர்.