சாலையில் விபத்துக்குள்ளாகும் நபர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர உயிர் காக்கும் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும் “இன்னுயிர் காப்போம்- உதவி செய்” திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி உள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் 18.11.2021 அன்று சாலையில் ஏற்படும் விபத்துகளை தடுக்கவும், உயிரிழப்புகளை தடுக்கவும், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சாலைகளில் எதிர்பாராத விதமாக ஏற்படும் விபத்துக்களை தடுப்பது, உயிரிழப்புகளை தடுப்பது, முதலுதவி செய்ய பயிற்சி அளிப்பது, புதுவிதமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சாலையில் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுப்பது போன்றவை குறித்து விளக்கப்பட்டது.

மேலும் இதில் முக்கியமாக “இன்னுயிர் காப்போம்-உதவி செய்” என்கிற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பான திட்டம் மூலமாக சாலையில் விபத்துக்குள்ளாகும் நபர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர உயிர்காக்கும் சிகிச்சையை அரசே முழுமையாக ஏற்றுக்கொள்ளும்.

இந்த பிரத்தியேக திட்டத்திற்கு என்றே முதற்கட்டமாக 50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை இல்லாதவர்களும், வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களும், வேறு நாட்டை சேர்ந்தவர்களும், எவராக இருந்தாலும் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து கொள்ளலாம்.

இந்த திட்டம் விரைவில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்துடன் இணைக்கப்பட உள்ளது. இதற்கென்று அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் என 609 மருத்துவமனைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு உதவி செய்யவும், அவர்களின் உயிரை காக்கும் ஒரே நோக்கில் செயல்படுத்தப்பட்டது தான் இந்த திட்டம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வருடன் போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.