டிடிவி ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என 3வது நீதிபதி எம்.சத்தியநாராயணன் தீர்ப்பளித்துள்ளார். இதன்மூலம் ஆட்சியமைக்க தேவையான இடங்கள் அதிமுகவிடம் உள்ளதால் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என அதிமுக நிம்மதி பெருமூச்சு அடைந்து உள்ளது ..
18 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கம் செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டதால் பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 214 ஆக மாறியுள்ளது. ஆகையால் பெரும்பான்மைக்கு 108 எம்.எல்.ஏ.க்கள் தேவைப்படும் நிலையில் அதிமுக 109 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சியை தக்கவைத்துள்ளது.
இதனையடுத்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும், அதன் முடிவுகளை பொறுத்தே அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும்.
முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் புகார் கொடுத்த 18 எம்.எல்.ஏக்களை பேரவைத் தலைவர் தனபால் கடந்த பிப்ரவரி மாதம் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வெற்றிவேல், தங்கத்தமிழ்செல்வன் உள்ளிட்ட 18 பேரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, 18 பேரையும் தகுதி நீக்கம் செய்ய பேரவைத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது என்றும் பேரவைத் தலைவர் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தீர்ப்பளித்தார். நீதிபதி எம்.சுந்தர் தனது தீர்ப்பில், இயற்கை நியதிக்கு எதிராக பேரவைத் தலைவர் முடிவு எடுத்துள்ளார். தகுதி நீக்கம் செய்வதற்கு முன் 18 பேருக்கும் போதிய வாய்ப்பு தரப்படவில்லை. எனவே, பேரவைத் தலைவரின் உத்தரவு செல்லாது என்று உத்தரவிட்டார்.
இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால் தீர்ப்பில் இறுதி முடிவை எட்ட இந்த வழக்கை 3வது ஒரு நீதிபதி விசாரிக்க வேண்டும். இதையடுத்து, எம்.சத்யநாராயணனை 3வது நீதிபதியாக நியமனம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், நீதிபதி சத்தியநாராயணன் இந்த வழக்குகளை விசாரித்தார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் பி.எஸ்.ராமன், மோகன் பராசரன் ஆகியோர் வாதிட்டனர். முதல்வர் பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தஹி, வக்கீல் திருமாறன் ஆஜராகி வாதிட்டனர்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் சார்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் வாதிடும்போது, ஆட்சியை கவிழ்க்க திட்டம் தீட்டியதாக 18 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக ஜக்கையன் அளித்ததாகச் சொல்லப்படும் புகார் தொடர்பான ஆவணங்கள் எங்கள் தரப்புக்கு பேரவைத் தலைவர் தரவில்லை. உட்கட்சி விவகாரம் என்பதால், 18 பேருக்கு எதிராக கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே தவிர, தகுதி நீக்கம் செய்து உத்தரவிட முடியாது என்று வாதிட்டார். பேரவைத் தலைவர் மற்றும் முதல்வர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் பதிலளித்து வாதிடும்போது, 18 பேரும் கட்சிக்கு எதிராக செயல்பட்டுள்ளனர்.
தகுதி நீக்க உத்தரவு அவசரகதியில் பிறப்பிக்கப்படவில்லை. சட்டம் மற்றும் இயற்கை நியதிக்கு உட்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஆகஸ்ட் 31ம் தேதி தள்ளிவைத்தார்.
இந்நிலையில் 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கம் செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டதால் அதிமுக ஆட்சி 109 எம்எல்ஏக்கள் பலத்துடன் ஆட்சியை தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.
தகுதிநீக்கம் செய்யப்பட்ட தங்கதமிழ் செல்வன் அதிமுக அரசை எதிர்த்து ஓட்டு போட்ட ஒபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் செய்த்தது சரி முதல் அமைச்சர் மட்டுமே மாற்ற வேண்டும் என்று சொன்ன எஙகளுக்கு தகுதி நீக்கமா என்று கோபத்துடன் கூறினார் .
இந்நிலையில், தினகரனுக்கு ஆதரவாக ரத்தினசபாபதி, கலைச்செல்வன், எஸ்.ஆர்.பிரபு ஆகிய 3 அதிமுக எம்எல்ஏக்கள் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் 3 பேரும் தகுதி நீக்க எம்எல்ஏக்களுடன் குற்றாலத்தில் தங்கியுள்ளனர். இதையடுத்து தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அதிமுக எம்எல்ஏக்களான ரத்தினசபாபதி, கலைச்செல்வன், எஸ்.ஆர்.பிரபு ஆகிய 3 பேர் மீதும் சபாநாயகர் தகுதி நீக்க நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.