குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் தயாரிக்க 2013ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு தடை விதித்தது. இந்த தடையை மீறி புகையிலை பொருட்கள் தமிழகத்தில் சட்ட விரோதமாக தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வந்தன. கடந்த 2016-ல் சென்னை செங்குன்றத்தில் உள்ள தொழிலதிபர் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில் குட்கா தடையின்றி விற்பனை செய்ய அமைச்சர், 2 போலீஸ் கமிஷனர்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதற்கான பட்டியல் கொண்ட ஒரு டைரி கிடைத்தது. டைரியில் உள்ள தகவலின் படி வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பினர். அந்த கடிதத்தில் குட்கா வியாபாரி மாதவராவிடம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததாக கூறப்பட்டது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதால் வழக்கு முறையாக நடைபெறாது என்று திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 26.4.2018ம் தேதி உத்தரவிட்டது.
அதை தொடர்ந்து, சிபிஐ தனது விசாரணையை தொடங்கி டிஐஜி எம்.கே.சின்கா, எஸ்பி கண்ணன் ஆகியோர் தலைமையில் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் இரண்டு மாதங்களுக்கு முன்பு அதிரடி சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். பின்னர் சிபிஐ அதிகாரிகள் கடந்த 29ம் தேதி குட்கா வியாபாரி மாதவராவை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்து 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது மாதவராஜ் அளித்த வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து டெல்லி, மும்பை பெங்களூரு பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தனர். பின்னர் நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அதிகாரிகள் அனைவரும் சோதனை குறித்து ஆலோசனை நடத்தினர்.
அதை தொடர்ந்து குட்கா முறைகேட்டில் ரூ.40 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில், அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட 35 பேரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் நேற்று காலை முதல் இரவு வரை அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
தனித்தனி குழுக்களாக சிபிஐ அதிகாரிகள் பிரிந்து நேற்று காலை 6.30 மணிக்கு ஒரே நேரத்தில் சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, புதுச்சேரி, பெங்களூரு, மும்பை, குண்டூர் ஆகிய ஊர்களில் 35 இடங்களில் அதிரடி சோதனையை தொடங்கினர்.
சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள தமிழக சுகாதராத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை அண்ணாநகர் 5வது அவென்யூ ஓய் பிளாக்கில் உள்ள வீடு, சென்னை முகப்பேர் மேற்கு ஏரி திட்டப்பகுதி 8வது தெருவில் உள்ள தமிழக டிஜிபி. டி.கே.ராஜேந்திரன், முகப்பேர் மேற்கு நொளம்பூரில் உள்ள முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரது வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அதேபோல், உதவி கமிஷனர் மன்னர்மன்னன்(ரெட்கில்ஸ் உதவி கமிஷனராக இருந்தவர்), விழுப்புரம் டிஎஸ்பி சங்கர்(மத்தியக் குற்றப்பிரிவு உதவி கமிஷனர்), தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் குமார்(ரெட்கில்ஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர்) ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
அதேபோல், குட்கா தயாரிக்கும் அண்ணாமலை இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்கள், குட்கா வியாபாரிகளான ஏ.வி.மாதவராவ், உமாசங்கர், சீனிவாசராவ் ஆகியோர் வீடு மற்றும் நிறுவனங்கள், உணவு பாதுகாப்பு மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் செந்தில் முருகன், டாக்டர் லட்சுமிநாராயணன், சிவக்குமார் வீடுகள், மத்திய வரித்துறை அதிகாரிகளான குல்சார் பேகம், கலால் வரித்துறை கண்காணிப்பாளர் என்.கே.பாண்டியன், சேஷாத்ரி வீடுகள், விற்பனை வரித்துறை அதிகாரிகள் பன்னீர்செல்வம், குறிஞ்சி செல்வம், கணேசன் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் குட்கா வழக்கிற்கு தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. குறிப்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி.டி.கே.ராஜேந்திரன் வீடுகளில் 11 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அந்த ஆவணங்களை வைத்து சிபிஐ அதிகாரிகள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி.டி.கே.ராஜேந்திரனிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் அளித்த பதிலை சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். விசாரணையின் போது இருவரிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் வீட்டில் உள்ள கணினிகள் மற்றும் தொலை தொடர்பு சாதனங்களை ஆய்வு செய்து அதில் உள்ள ஆவணங்களையும் அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.
முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், தற்போது வசிக்கும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வீடு மற்றும் சென்னையில் உள்ள வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. சென்னை வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணகள் குறித்து திருவனந்தபுரத்தில் உள்ள ஜார்ஜிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தினர்.
அப்போது, குட்கா வழக்கில் லஞ்சம் பெற்றதாக 30 அதிகாரிகள் மீது எதன் அடிப்படையில் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி தமிழக உள்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பினீர்கள். ஏதாவது ஆதாரங்கள் உங்களிடம் உள்ளதா, மாதவராவ் டைரியில் உங்கள் பெயரும் உள்ளது. அப்படி இருக்கும் போது, 30 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கடிதம் அனுப்பியது எதற்கு உள்ளிட்ட பல கேள்விகளை கேட்டனர்.
பின்னர் ஜார்ஜ் அளித்த பதிலை சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். இந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதால், விரைவில் மேலும் சில அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும், தற்போது விசாரணை நடத்தியவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கவும் சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
குட்கா முறைகேடு குறித்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வீட்டில் நேற்றிரவு வரை சோதனை நீடித்தது. இதன்பின் இரவு 9.30 மணிக்கு கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு ராஜேந்திரன் சென்று முதல்வரை சந்தித்து பேசினார். சிபிஐ நடத்திய சோதனை, அவர்கள் கேட்ட கேள்விகள், அதற்கு அளித்த பதில்கள் மற்றும் வழக்கு அடுத்து எப்படி செல்லும் என்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
ஆனால் இந்த சந்திப்பில் அவர் ராஜினாமா செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ராஜேந்திரன் 2 ஆண்டுகள் பதவி நீட்டிப்பில் உள்ளார். இதனால் அவராக ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இதனால் ராஜினாமா செய்யத் தயார் என்று கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்திய வரலாற்றிலேயே லஞ்ச வழக்கில் பதவியில் இருக்கும் டிஜிபி ஒருவர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியது இதுவே முதல் முறை. ஏற்கனவே, தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவ் வீட்டிலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்தப்பட்டது பெரிய அவமானமாக கருதப்பட்டது.
இதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் அடுத்த நாளே அதிரடியாக மாற்றப்பட்டார். தற்போது சட்டம் ஒழுங்கு டிஜிபி வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதுவும் சட்டம் ஒழுங்கு, நேர்மை, நியாயத்தை கடைப்பிடிக்க வேண்டிய டிஜிபி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது, தமிழக போலீசின் கவுரவத்தை வெகுவாக குறைத்து விட்டதாக போலீஸ் உயர் அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.