மாணவர்களுக்கு 40% பாடங்கள் குறைக்கப்பட்டாலும், எந்தெந்த பாடங்களை படிக்க வேண்டும் என்று உடனடியாக அறிவிக்குமாறு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. தற்போது மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், தொற்று காரணமாக, மாணவர்களின் பாடத்திட்டங்களை குறைக்க, கல்வியாளர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு நியமனம் செய்தது. இக்குழு, நடப்பு கல்வி ஆண்டிற்கான 40% பாடத்திட்டங்களை குறைக்க பரிந்துரைத்தது. அதன்படி குறைக்கப்பட்ட 40% பாடங்கள் எவை எவையென்று அறிவிக்கவில்லை.

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “கொரோனா பெருந்தொற்று நடவடிக்கையாக 2020-21ம் கல்விஆண்டு பள்ளிகள் இன்னும் திறக்கவில்லை. உயிரா படிப்பா என்றால் உயிர்தான் முக்கியம்.

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும் என்ற அடிப்படையில் மாற்று ஏற்பாடாக கற்றல் பணி பாதிக்கப்படாத வகையில் தொலைக்காட்சி வாயிலாக பாடம் எடுக்கப்பட்டு வருவதை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது.

மேலும் இந்த நெருக்கடியான சூழலில் மாணவர்களின் மனநிலையறிந்து பாடச் சுமையை குறைக்கும் வகையில் இந்த கல்வியாண்டில் 40% பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என்ற பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.

ஆனால் குறைக்கப்பட்டப் பாடங்கள் எவை எவையென்று இதுவரை அறிவிக்கப்படாததால் எதை படிப்பது என்று மாணவர்கள் குழப்பத்தில் உள்ளார்கள். எனவே எந்தெந்த பாடங்கள் குறைக்கப்பட்டிருக்கிறது என்ற விவரங்களை மாணவர்களின் நலன்கருதி வெளியிட வேண்டும்.

எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடியத் தேர்வு என்பதாலும், அகில இந்திய அளவில் போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் மாணவர்கள் தங்களை நம்பிக்கையுடன் தயார்படுத்திக் கொள்ள ஏதுவாக இந்த கல்வியாண்டிற்கானப் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில்,

பொதுத்தேர்வை எதிர்நோக்கியுள்ள குறிப்பாக பன்னிரெண்டாம் வகுப்பிற்கான குறைக்கப்பட்டப் பாடத்திட்டங்களை வெளியிட்டு உதவிட ஆவன செய்யும்படி மாண்புமிகு முதல்வர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழைக் கற்பிக்க நிபந்தனையா.. மு.க.ஸ்டாலின் கண்டனம்