நாடு முழுவதும் இதுவரை 3.8 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாகவும், இதில் 580 பேருக்கு மட்டுமே பக்க விளைவுகள் ஏற்பட்டதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்து உள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,962 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,572,672ஆக அதிகரித்துள்ளது. அதில் 1,52,593 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள முதல் 5 மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா (1,987,678), கர்நாடகா (931,252), ஆந்திரா (885,824), கேரளா (842,843), மற்றும் தமிழ்நாடு (830,183) ஆகியவை உள்ளன.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை கடந்த 16 ஆம் தேதி முதல் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதற்காக பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் மற்றும் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளும் நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில் முதற்கட்டமாக 1 கோடி மருத்துவ பணியாளர்கள் மற்றும் சுமார் 2 கோடி முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அவர்களை தொடர்ந்து 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், பின்னர் 50 வயதுக்கு உட்பட்ட நோயாளிகளுக்கும் தடுப்பூசி போடப்படும்.
அந்த வகையில் இதுவரை நாடு முழுவதும் 3.8 லட்சத்துக்கு அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மனோகர் அக்னானி கூறியதாவது, ஜனவரி 18 ஆம் தேதி வரை நாடு முழுவதும் 3,81,305 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதில் முதல் நாளில் மட்டும் 2,07,229 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
இந்த 3 நாட்களில் வெறும் 580 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டபின் பக்க விளைவுகள் ஏற்பட்டன. அதில் 3 பேருக்கு மட்டுமே ஆஸ்பத்திரியில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மற்ற அனைவருக்கும் லேசான காய்ச்சல், தலைவலி, குமட்டல் போன்ற பிரச்சினைகள்தான் ஏற்பட்டன” என்று தெவித்து உள்ளார்.
இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி தடுப்பூசி போட்டுக் கொண்ட உத்தரபிரதேச மாநிலம், மொரதாபாத்தில் உள்ள அரசு தீனதயாள் உபாத்யா ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை பிரிவில் ஊழியராக (வார்டு பாய்) இருந்து வந்த மகிபால் (வயது 46) என்பவர் இருமல், காய்ச்சல், சுவாச பிரச்சினை ஏற்பட்டு, அவர் மரணம் அடைந்தார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் மிலிந்த் சந்திர கார்க் கூறும்போது, மகிபாலின் மரணத்திற்கு அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்ததே காரணம் எனக் கூறி உள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும், மகிபால் கொரோனா தடுப்பூசி தொடர்பான விளைவுகளால் மரணம் அடையவில்லை எனத் தெரிவித்துள்ளது.
மரணம் அடைந்த மகிபால் மகன் விஷால் கூறுகையில், தடுப்பூசி போட்டுக் கொண்டதும் அவருக்கு காய்ச்சலும், சுவாசிப்பதில் பிரச்சினையும் ஏற்பட்டு, என்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்தார். அதைத் தொடர்ந்து அவர் ஞாயிற்றுக்கிழமையன்று ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, இரவில் அவர் மரணம் அடைந்தார்.
மகிபாலுக்கு இதய நோய் இல்லை என்றும், அவர் காய்ச்சல் மற்றும் இருமல் தவிர்த்து ஆரோக்கியமாகத்தான் இருந்தார் என்றும் அவரது மகன் விஷால் மற்றும் குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.
அதேபோல் கர்நாடக மாநிலம் பெல்லாரியை சேர்ந்தவர் 16 ஆம் தேதி தடுப்பூசி போட்டுக்கொண்ட பின், மறுநாள் மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கான உண்மையான காரணமும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
PM Cares Fund சர்ச்சை; 100 முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் காட்டம்