தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கும், இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்திற்கும் இடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கும் , இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்திற்கும் இடையே தமிழ்நாட்டில் மின் உற்பத்தி திறனை மேம்படுத்த புதிய திட்டங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப முறைகளை கையாளுதல் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது .
தமிழ்நாட்டின் மின்சக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தன்னிறைவு பெறுவதற்கும் , தனியாரிடமிருந்து மின் கொள்முதல் செய்யும் செலவைக் குறைப்பதற்கும், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அடுத்த பத்தாண்டுகளில் குறைந்தபட்சம் 20,000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம்,
3,000 மெகாவாட் நீரேற்று புனல் மின்சாரம் மற்றும் 2,000 மெகாவாட் எரிவாயு மின்சாரம் என மொத்தம் 25,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டு வருகிறது . இத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு ரூ.1,32,500 கோடி நிதி தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 25,000 MW மரபுசாரா மின் உற்பத்திக்கு என ரூ. 1,32,500 கோடியில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் – இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.
சூழல் காக்கும் பசுமை எரிசக்தி திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். pic.twitter.com/pNhsjmGj0Y
— M.K.Stalin (@mkstalin) September 6, 2021
இது தொடர்பாக இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம், மரபு சாரா எரிசக்தித் துறையில் திறன் படைத்த நிறுவனங்கள் கையாளுகின்ற உத்திகளை ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கும். மேலும், இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம், சந்தை ஆய்வு, திட்ட மேம்படுத்துதல், ஒப்பந்தப்புள்ளிகள் மேலாண்மை, அமலாக்கம் ஆகியவை தொடர்பாகத் தனது மேம்பட்ட ஆலோசனைகளைத் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு வழங்கும்.
இந்நிகழ்வின்போது மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி,
இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பிரதீப் குமார் தாஸ், தொழில்நுட்ப இயக்குநர் சிந்தன் நவீன்பாய் ஷா, துணை மேலாளர் ஆயுஷ் கந்தல்வால் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்- இட ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு!