சென்னை ஆதம்பாக்கத்தில் மகளிர் விடுதி நடத்தி வந்த ஒருவர், அங்கு தங்கியிருந்த பெண்களுக்கு தெரியாமல் ரகசிய கேமரா மூலம் அவர்களை படம் பிடித்ததாக செவ்வாயன்று கைது செய்யப்பட்டார்.
 
இந்நிலையில் உரிமம் பெறாமல் மகளிர் விடுதிகள் நடத்தினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 
சிறார் இல்லங்கள், மாணவியர், பணியாற்றும் பெண்களுக்கான விடுதிகள் நடத்துபவர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.
 
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்து அத்தாட்சி பெற்ற பின்னரே விடுதிகளை இயக்க வேண்டும். விடுதி நடத்துவோர் மாவட்ட சமூக நல அலுவலரிடம் பதிவுச்சான்று, உரிமம் பெற வேண்டும். இவைதவிர விடுதி நடத்துவோர் தீயணைப்புத்துறை, காவல்துறை, மாநகராட்சி உள்ளிட்ட துறைகளிடம் உரிய உரிமம் பெற வேண்டும்.
 
அதேபோல உரிய அதிகாரியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட கட்டிடங்களில் மட்டுமே விடுதி, காப்பகம் அமைக்க வேண்டும். ஆண், பெண் ஆகியோருக்கு தனித்தனி கட்டிடம் அமைக்க வேண்டும். பதிவுச்சான்று மற்றும் உரிமம் இன்றி விடுதி நடத்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
 
விடுதி நடத்துவதற்கு ஆட்சியரிடம் பதிவு செய்வதற்கான சான்றிதழை அந்தந்த விடுதி அறிவிப்பு பலகைகளில் ஒட்ட வேண்டும். பதிவு பெற்ற விடுதிகளின் பெயர்ப்பட்டியல் முகவரியோடு டிசம்பர் 31-ம் தேதிக்குள் சென்னை மாவட்ட இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
 
2019 ஜனவரி முதல் பதிவின்றி இயங்கும் எந்த விடுதியிலும் பெண்கள், குழந்தைகளை தங்க வைக்க வேண்டாம் பதிவின்றி இயங்கும் விடுதிகள் குறித்து 9444841072 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்கலாம்.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.