தமிழகம் முழுவதும் 24 இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் நடந்த ரெய்டில் ரூ. 44.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி அரசு அலுவலகங்களில் வசூல் வேட்டை நடைபெறுவதாக கடந்த சில நாட்களாக கடும் புகார் எழுந்தது. இந்தநிலையில் தமிழகத்தின் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்று தஞ்சை, தென்காசி, சேலம் உள்ளிட்ட பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுனர் உரிமங்கள் வழங்க லஞ்சம் கேட்பதாக தொடர்ந்து புகார் குவிந்தன.
இதனையடுத்து சேலம் மேட்டூர் ஆர்டிஓ அலுவலகம் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும், அங்கிருந்த புரோக்கர்கள் பணத்தை தரையில் வீசிவிட்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சேலம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள 24 அரசு அலுவலகங்களில் இன்று நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் ரூ.44.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகபட்சமாக வேலூர் ஆவின் தலைமை அலுவலகத்தில் மட்டும் ரூ.14.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் வடக்கு, தெற்கு டாஸ்மாக் மேலாளர் அலுவலகங்களில் ரூ.1.32 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையிலும் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் ஆவடி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தி வருகின்றனர். நகராட்சி ஆணையர் ஜோதிகுமார் அறை, வாகனத்தில் சோதனை நடந்து வருகிறது.