ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் வழங்கி 36% வரை வட்டி வசூலித்து மோசடி செய்ததாக சீனாவை சேர்ந்த இருவர் உள்பட 4 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.

2020 ஆம் ஆண்டு அனைத்து தரப்பு மக்களுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் வேலை இழந்தவர்கள் பணத்தேவைக்காகவும் குடும்பத்தை நடத்தவும் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்த சூழலை சமூகவிரோதிகள் சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, ஆன்லைன் ஆப்கள் மூலம் கடன் வழங்கப்படும் என விளம்பரங்களை இணையதளத்தில் வெளியிட்டனர். இதை நம்பிய மக்கள் பணத்தேவைக்காக எதையும் யோசிக்காமல் பார்த்த செயலிகளை எல்லாம் தங்கள் போனில் டவுன்லோடு செய்து, இதன் மூலம் கடன் பெற்றனர்.

ஆனால் கந்து வட்டியை விட மோசமாக இருந்தது இந்த ஆன்லைன் கடன். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த பழையனூர் கிராமத்தைச் சேர்ந்த விவேக், தனது தந்தையின் மருத்துவ செலவிற்காக ரூ 4,000 கடன் பெற்று, குறிப்பிட்ட நாட்களுக்குள் கடனை செலுத்த முடியவில்லை. இதனால் அந்த நிறுவனத்தினர் விவேக்கை ஆபாசமாக திட்டி, அவமானப்படுத்தி பேசியதால் விவேக் தற்கொலை செய்து கொண்டார்.

கடன் கொடுத்து அவமானப்படுத்திய ஆன்லைன் ஆப் நிறுவனம்.. இளைஞர் தற்கொலை

இதுபோன்று லோன் ஆப்கள் மூலம் கடன் கொடுத்து வட்டிக்கு வட்டி என வசூலித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சென்னை காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலுக்கு புகார்கள் சென்றன.

புகாரின் பேரில் மிரட்டல் விடுக்கும் எண்ணை சென்னை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீஸார் புலனாய்வு செய்தனர். அதில் புகார்தாரருக்கு வந்த மிரட்டல் அழைப்புகள் பெங்களூருவில் ‘ட்ரூ கிண்டில் டெக்னாலஜி பிரைவேட் கம்பெனி’ என்ற பெயரில் இயங்கி வரும் கால்சென்டரில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்தனர். அந்த கால்சென்டரில் சோதனை நடத்தியபோது, அங்கு 110 பேர் பணி புரிவதும், பெங்களூரு சவுத் இந்திரா நகர் துப்பனஹல்லி பகுதியை சேர்ந்த பிரமோதா (28) , தும்கூர் மாவட்டம் சிக்கனஹல்லி பகுதியை சேர்ந்த சி.ஆர்.பவான் (27) ஆகிய 2 பேர் இந்த கால்சென்டரை நிர்வகித்து வருவதும் தெரியவந்தது.

இவர்கள் கடன் செயலிகள் மூலம் இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கடன் அளித்துள்ளனர். கடன் செலுத்தாவிட்டால் இந்த கால்சென்டர் ஊழியர்கள் மிரட்டியது தெரியவந்தது. இதையடுத்து இவர்களை கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி கைது செய்து 21 லேப்டாப்கள், 20 செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் இவர்களை வழிநடத்தியது சீன நாட்டை சேர்ந்த சியாவ் யங்மாவ், ஊ யுமேன் என தெரியவந்தது. இவர்கள் இருவரும் கர்நாடகா மாநிலம் ஹரலூரில் தங்கியிருப்பதை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்தும் 2 லேப்டாப்கள், 6 செல்போன்கள், பாஸ்போர்ட், ஏடிஎம் கார்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்கள் 4 பேரும் சென்னை அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில் முக்கிய குற்றவாளி சீனாவில் வசிக்கும் ஹங்க் என்பவர் தான் இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். இவரது உத்தரவின்படி பிரமோதா, பவான் ஆகியோர் உத்தரவுகளை வழங்குவார்கள். தினமும் 10 பேருக்கு கடன் அளிக்க வேண்டும். இந்த இலக்கை அடையாதவர்கள் வார இறுதியில் பணிநீக்கம் செய்யப்படுவர்.

மேலும் இந்த வழக்கில் கைதான 4 பேரும் இரு வங்கிக் கணக்குகளை பயன்படுத்தி வந்துள்ளனர். அதில் ஒரு வங்கிக் கணக்கில் ரூ 1.98 கோடியும், மற்றொரு கணக்கில் ரூ 48 லட்சமும் இருந்தது. இதையடுத்து இரண்டையும் போலீஸார் முடக்கினர்.

இந்த சீனர்கள் இருவரின் விசா காலாவதியானதும் தெரியவந்தது. கொடுக்கும் கடனுக்கு 36% வட்டியை வசூலித்துள்ளனர். அதேபோல் இவர்களுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆன்லைன் கடன் செயலிகளை பயன்படுத்த வேண்டாம்- சென்னை காவல் ஆணையர்