இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் ஆபத்து நிலையில் இருப்பதாக நாடாளுமன்ற குழு ஒன்றின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நாடாளுமன்ற செலவின கணிப்புக் குழு இமயமலையில் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இமயமலைப் பகுதியில் சுற்றுலா சார்ந்த நடவடிக்கைகளை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் என்றும், உயிர் சூழலை பாதுகாப்பது தொடர்பான செயல்திட்ட வரைவை உருவாக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை நிர்ணயம் செய்வதற்காக நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
இமயமலைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால், சாலைகள், வீடுகள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் போன்றவற்றை கட்டமைப்பதற்காக மலைகள் வெட்டப்படுவதாகவும், அதன் காரணமாக உயிர்ச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
இமயமலையில் நிலவும் அபாயகர சூழல் குறித்து பொதுமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற ஆய்வுக் குழு பரிந்துரைத்துள்ளது.
 
கடந்த 10 ஆண்டுகளில் மொத்த பனிப்பாறைகளில் 13 சதவீதம் அளவுக்கான பாறைகள் அழிவைச் சந்தித்திருப்பதாகவும், இதே நிலை நீடித்தால் 2035-ஆம் ஆண்டில் பனிப்பாறைகள் அனைத்தும் காணாமல் போய்விடும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இமய மலையின் உயிர்சூழலை விரிவாக ஆய்வு செய்வதற்கான நிதி ஒதுக்கீட்டை செய்வதுடன், அதற்கான கட்டமைப்புகளையும் ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு அந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.