சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்காக பம்பையில் இருந்து காவல்துறை பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை மலையேறத் தொடங்கிய 11 பெண்கள் ஹிந்துவா பிற்போக்கு அமைப்பினர் எதிர்ப்பு காரணமாக பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு திரும்பினர்.
 
அவர்கள் அனைவரும், சென்னையைச் சேர்ந்த “மனிதி’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
 
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. ஹிந்துவா அமைப்பினர் கடும் எதிர்ப்புகளையும் மீறி அந்த தீர்ப்பை செயல்படுத்த கேரள அரசு முனைப்புடன் உள்ளது.
 
இதுவரையிலும் 14-க்கும் மேற்பட்ட பெண் ஆர்வலர்கள், காவல்துறை பாதுகாப்புடன் மலையேறிச் சென்ற போதிலும், பக்தர்களின் போராட்டம் காரணமாக எந்தப் பெண்ணும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
 
இந்தச் சூழலில் “மனிதி’ அமைப்பைச் சேர்ந்த 11 பெண்கள் இடுக்கி – கம்பம்மேடு வழியாக கேரள காவல்துறை பாதுகாப்புடன் பம்பைக்கு சென்றனர். வழிநெடுகிலும் ஹிந்துவா அமைப்பினர் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், காவல்துறை அவர்களைச் சமாளித்து அந்தப் பெண்களை பம்பை வரை அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
பதினோறு பெண்களும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் பம்பை வந்தனர். ஆனால் அங்கு கூடிய ஹிந்துவா அமைப்பினர் பாடல்களை பாடி எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இதையடுத்து, காவல்துறை அப்பெண்களை திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தியது. ஆனால், அப்பெண்கள் பிடிவாதத்துடன் 6 மணி நேரம் காத்திருந்தனர்.
 
இதற்கிடையே, ஹிந்துவா அமைப்பினர் சிலரை காவல்துறை கைது செய்தது. பின்னர் 11 பெண்களும் காவல்துறை பாதுகாப்புடன் மலையேற முற்பட்டனர்.
 
அப்போது, மீண்டும் நூற்றுக்கணக்கான ஹிந்துவாஅமைப்பினர் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர். இதையடுத்து, அந்த பெண்களும், காவல்துறையினரும் தங்கள் பயணத்தைக் கைவிட்டு திரும்பினர்.
 
இதற்கிடையே, பெண்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல்வர் இல்லம் முன்பாக பாஜக உள்ளிட்ட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
சபரிமலையை வன்முறை களமாக்க கேரள அரசு முயற்சிப்பதாகவும், மனிதி அமைப்பின் உறுப்பினர்களிடையே உண்மையான ஐயப்ப பக்தர்கள் யாரும் இல்லை என்றும் அந்த மாநில பாஜக தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை தெரிவித்தார். இதன் இடையே முக்கிய  பாஜக நிர்வாகிகள் நாலவர் அந்த கட்சியின் நிலைப்பாட்டை கண்டித்து கட்சியில் இருந்து வெளியேரியது பரபரப்பை கூட்டி உள்ளது 
 
சபரிமலையை, கேரள அரசு அழிக்க முயற்சிப்பதாக அந்த மாநில எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா குற்றம்சாட்டினார். பந்தளம் அரச குடும்பத்தினர் உள்ளிட்டோர் இந்த விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயனுக்கும், கேரள அரசுக்கும் கண்டனம் தெரிவித்தனர்.
 
இதனிடையே, சபரிமலையில் பக்தர்களின் நம்பிக்கையை காப்பதும், அமைதியை நிலைநாட்டுவதுமே கேரள அரசின் குறிக்கோள் என்று மூத்த அமைச்சர் இ.பி.ஜெயராஜன் தெரிவித்தார்.