கொரோனா வைரஸ் தடுப்பூசி 2021 ஆம் ஆண்டுக்கு முன் சந்தைக்கு விற்பனைக்கு வர வாய்ப்பில்லை என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியான கொவாக்சினை, மனித உடலில் செலுத்தும் பரிசோதனைகள் ஜூலை 7 ஆம் தேதி தொடங்கும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. இதற்காக தமிழகத்தில் சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி உட்பட டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 13 மருத்துவக் கல்லூரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதன் தொடர்ச்சியாக, சுதந்திர தினமான வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி, கொவாக்சின் தடுப்பூசியை சந்தைக்கு கொண்டுவர இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) இலக்கு நிர்ணயித்திருந்துள்ளது. இந்த செய்தி இந்திய மக்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி குறித்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் மொத்தம் ஆறு இந்திய நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ள COVAXIN, ZyCov-D ஆகிய இரண்டு தடுப்பூசிகளை மனித உடலில் செலுத்தும் முதல்கட்ட பரிசோதனை பணிகள் தொடங்கியுள்ளன. இந்தியாவில் மட்டும் மொத்தம் 11 நபர்கள் இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இருப்பினும், மூன்றுகட்ட பரிசோதனைகள் நிறைவடைய வேண்டியுள்ளதால், 2021 ஆம் ஆண்டுக்கு முன் கொரோனா தடுப்பூசிகள் பெரிய அளவிலான எண்ணிக்கையில சந்தைக்கு விற்பனைக்கு வர வாய்ப்பில்லை” என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க: தலைமை மருத்துவர் சுகுமார் கொரோனா தொற்றால் பலி; உரிய பாதுகாப்பின்மை காரணமா..