செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், இதுவரை மருத்துவர்கள், ஊழியர்கள் என ஒருவருக்கும் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக உள்ளனர் என சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறிய ஓரிரு நாட்களில் தலைமை மருத்துவர் சுகுமார் கொரோனா தொற்றால் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 300 மருத்துவர்கள், 350 செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் என 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மொத்தம் 350க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இங்கு ஜூலை.01 அன்று ஒரே நாளில் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கும் 4 மருத்துவர்கள், 5 செவிலியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், புறநோயாளிகள், உள்நோயாளிகள், பிரசவ வார்டில் பணியாற்றியவர்கள் என அனைவரையும் கண்காணித்து பரிசோதனை செய்யவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சுகுமார் ஜூலை.03 ஆம் தேதி கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் வாசிக்க: தமிழகத்தில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. கிராமப்புறங்களிலும் வேகமெடுக்கிறதா..

முன்னதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஜூன் 30 ஆம் தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, கொரோனா தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ குழுவினருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும் கொரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு நோயாளிகள் பற்றி கேட்டறிந்தார். பின்னர் சிறப்பாக பணியாற்றும் மருத்துவ குழுவினரை பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மருத்துவர் சுகுமார் மரணத்திற்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில், கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு அரசு மருத்துவமனைத் தலைமை மருத்துவர் திரு. சுகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு மிகவும் வேதனையுற்றேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்களப் பணியாளர்கள் ஒவ்வொருவரின் உயிரையும் பாதுகாத்திட, இனியொரு மரணம் நிகழ்ந்து விடாமல் தடுத்திட, உரிய மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று அதிமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.