“ஒரு அடார் லவ்” என்ற மலையாள படத்தில் நாயகியாக நடித்தவா் பிரியா பிரகாஷ் வாரியர். இப்படம் வெளியாவதற்கு முன்பே இந்தியாவையே தன் கண்ணசைவின் மூலம் திரும்பி பார்க்க வைத்தவா் பிரியா பிரகாஷ் வாரியா். பிரியா வாரியரின் கண் அசைவு காட்சி இணையத்தில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடா்ந்து அவருக்கு சமூக வலைத்தளங்களிலும் அதிக அளவில் ரசிகர்கள் கிடைத்தனர்.

இந்நிலையில், 2018ம் ஆண்டில் இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது. அதில் முதலிடத்தில் இருப்பவர் பிரியா பிரகாஷ் வாரியர். பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனஸ் 2வது இடத்திலும், நடன கலைஞர் சப்னா சவுத்ரி 3வது இடத்திலும் உள்ளனர்.

இப்பட்டியலில் பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா 4வது இடத்திலும், நடிகை சோனம் கபூரின் கணவர் ஆனந்த் அஹுஜா 5வது இடத்திலும், பாலிவுட் நடிகை சாரா அலி கான் 6வது இடத்திலும், சல்மான் கான் 7வது இடத்திலும், மெகன் மார்கல் 8வது இடத்திலும், இந்தி பிக் பாஸ் பிரபலம் அனுப் ஜலோடா 9வது இடத்திலும், ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் 10வது இடத்திலும் உள்ளனர்.

2018ம் ஆண்டு இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட செய்திகள் பட்டியலில் ஃபிஃபா உலகக் கோப்பை முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் ப்ரியங்கா சோப்ரா திருமண செய்தி 3வது இடத்திலும், தீபிகா படுகோனே திருமண செய்தி 8வது இடத்திலும், சோனம் கபூரின் திருமண செய்தி 10வது இடத்திலும் உள்ளன.

வாட்ஸ்ஆப்பில் ஸ்டிக்கர்களை அனுப்புவது எப்படி, செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி, ரங்கோலி வரைவது எப்படி, செல்போன் எண்ணை போர்ட் செய்வது எப்படி, பிட்காயினில் முதலீடு செய்வது எப்படி போன்றவையும் கூகுளில் அதிகம் தேடப்பட்டவைகளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.