கவரவ கொலையை கருவாகக் கொண்ட ‘மர்டர்’ படம் தொடர்பாக பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிரனாய் குமார், தொழிலதிபர் மாருதி ராவ் மகள் அம்ருதாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரனாய் குமார் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் காதலிக்கும் சமயத்திலிருந்தே அம்ருதாவின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆனால், எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் கூலிப்படையை வைத்து கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரனாய் குமார் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தெலங்கானாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்குக் காரணமான அம்ருதாவின் தந்தை மாருதி ராவும் அவரது தம்பியும் கைது செய்யப்பட்டனர். கடந்த மார்ச் மாதம் மாருதி ராவ் ஐதராபாத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

இந்த கவுரவ கொலையை மையமாக வைத்து பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா, ‘MURDER’ என்ற பெயரில் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். தற்போது இந்த படத்துக்குத் தடை விதிக்க கோரி, பிரனாய் குமாரின் தந்தை பாலசாமி, ராம் கோபால் வர்மா மீது எஸ்.சி, எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அதில், ‘நீதிமன்றத்தில் நடந்து வரும் எனது மகன் கொலை வழக்கு விசாரணை, இந்த திரைப்படத்தால் பாதிக்கப்படும்’ என்று மனுவில் கூறியுள்ளார். இதையடுத்து நீதிமன்ற ஆணையின் பேரில் , சமூகங்களிடையே பகைமையைத் தூண்டுவதாக ராம்கோபால் வர்மா மீது மிர்யுலகோடா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பதிவில், “என்னுடைய ‘மர்டர்’ திரைப்படம் மீது பதியப்பட்ட வழக்கு குறித்து மீடியாக்களில் வந்த செய்தி குறித்து, நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். என்னுடைய திரைப்படம் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.

படத்தில் யாருடைய சாதியையும் குறிப்பிடவில்லை. தகவல் தெரிவிக்கப்படாத, ஊகத்தின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கு தொடர்பாக, எங்கள் வழக்கறிஞர்கள் சட்டப்படி தேவைக்கேற்ப பொருத்தமான விளக்கத்தை அளிப்பார்கள்.

நான் யாரையும் இழிவுபடுத்தவோ கேவலப்படுத்தவோ விரும்பவில்லை என்றும், என்னுடைய படம் பொதுவெளியில் உள்ள ஒரு விஷயத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் குறிப்பிட்டேன். ஆனால் சட்டத்தை மதிக்கும் ஒரு குடிமகனாக, என்னுடைய அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க நானும் சட்டரீதியாகச் செல்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க: 2 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் ட்வீட்.. எதற்குத் தெரியுமா..