2ஜி மேல்முறையீடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்பட குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
2010-ம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் செய்ததில் ரூ1.76 லட்சம் கோடி இழப்பீடு ஏற்ப்பட்டதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் அறிக்கை தாக்கல் செய்தார்.
 
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைக்கேடு நடந்துள்ளதாகக் கூறி ஆ.ராசா, கனிமொழி உள்பட 19 பேர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குகள் தொடர்ந்தன.
 
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதாவது இந்த வழக்கினால் மத்தியில் காங்கிரஸ் மற்றும் தமிழகத்தில் திமுக மீண்டும் அமையாமல் இருக்க ஒரு காரணமாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
2ஜி வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை டெல்லி உயர்நீதிமன்றம் அமைத்தது. இதனையடுத்து இந்த வழக்கை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. ஆ.ராசா, கனிமொழி உள்பட குற்றம்சாட்டப்பட்டவர்கள் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
2ஜி வழக்கை நீதிபதி ஓ.பி ஷைனி தலைமையில் விசாரணை நடைபெற்று வந்தது. தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையின் இறுதி தீர்ப்பில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 19 பேரை கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ம் தேதி சி.பி.ஐ. நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
 
இந்த தீர்ப்பை எதிர்த்து ஏற்கனவே டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்திருந்தது.
 
மோடி இரண்டாம் முறையாக வெற்றி பெற்ற விவகாரத்தில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்து வெற்றி பெற்றதாக புகார்களும் வீடியோ ஆதாரங்களும் குவிந்த நிலையில் இதை திசை திருப்ப முடிவு செய்த பாஜக தலைமை மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என சிபிஐ சார்பில் மீண்டும் டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஏ.கே. சாவ்லா, 2ஜி வழக்கில் விடுதலையான அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு ஜூலை 30 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.