அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றால், ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் உரிமம் பெறலாம் என்ற ஒன்றிய அரசின் புதிய விதி திருத்தத்திற்கு எதிரான வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓட்டுனர் உரிமம் பெற வேண்டுமென்றால், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ) தனியாக ஓட்டுனர் சோதனையில் பங்கேற்க வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால் தான் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும். இந்நிலையில், மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தில் ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் புதிய நடைமுறை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் ஓட்டுனர் பயிற்சியை முடித்தவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். ஆர்டிஓ அலுவலகங்களில் தனியாக ஓட்டுனர் சோதனையில் பங்கேற்க தேவையில்லை என்ற புதிய நடைமுறையை ஜூலை 1 ஆம் தேதி முதல் அமுலுக்கு கொண்டுவந்தது ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம்.

ஒன்றிய அரசின் இந்த புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த ஜான்மார்டின், உயர் நீதிமன்றக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மோட்டார் வாகன திருத்தச் சட்டம் 2019ன் 8 ஆம் பிரிவில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளின் அங்கீகார விதிகளில் ஒன்றிய அரசு திருத்தம் செய்துள்ளது.

இந்தத் திருத்தங்கள் கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இத்திருத்தத்தின் படி அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் ஓட்டுநர் பயிற்சி பெற்றவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற வட்டார போக்குவரத்து அலுவலர் முன்பு வாகனங்களை ஓட்டிக்காட்ட வேண்டியதில்லை. பயிற்சி முடிந்ததும் உரிமம் வழங்கப்படும்.

மோட்டார் வாகன சட்டத் திருத்தப்படி, அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் 2 ஏக்கர் பரப்பில் அமைந்திருக்க வேண்டும், வாகனம் ஓட்டுவதற்கான பயிற்சி பெற போதிய கட்டமைப்பு வசதிகளை பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். இந்த சட்டத் திருத்தப்படி, நகர்ப் பகுதியில் 2 ஏக்கர் நிலம் கிடைப்பது எளிதல்ல.

ஒன்றிய அரசின் சட்டத் திருத்தத்தால் இந்தியா முழுவதும் பல ஆண்டுகளாக இயங்கி வரும் 4187, தமிழகத்தில் 1650 ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் பாதிக்கப்படும். எனவே, ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி அங்கீகாரம் தொடர்பான ஒன்றிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மனு தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

கட்டண நிலுவையால் ஆன்லைன் வகுப்பில் மாணவர்களை சேர்க்க மறுப்பதா.. உயர் நீதிமன்றம்