மாணவர்களைப் பொதுத் தேர்வுக்குத் தயார்படுத்தும் வகையில் வாட்ஸ்அப் மூலம் அலகுத் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேசமயம், கொரோனா தொற்று குறைந்தவுடன் பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்தி முடிக்க, பள்ளிக் கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும் மாணவர்கள் எதிர்காலம் கருதி கட்டாயம் தேர்வு நடத்தப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களைப் பொதுத்தேர்வுக்குத் தயார்படுத்தும் வகையில் வாட்ஸ்அப் மூலம் அலகுத் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாட்ஸ் அப் மூலம் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே குழு ஏற்படுத்த வேண்டும். மாணவ மாணவிகளுக்குத் தனித்தனியாக உள்ள வாட்ஸ் அப் குழுவில் வினாத்தாள்களை அனுப்ப வேண்டும்.
மாணவர்கள் வினாத்தாளைப் பார்த்து அதற்குரிய விடைகளைத் தனித் தாளில் எழுத வேண்டும். விடைத்தாளில் பெற்றோர் கையொப்பம் பெற்றுப் பின் அதைப் படம் பிடித்து, PDF ஆக மாற்றிப் பதிவேற்ற வேண்டும்.
மாணவ, மாணவியர்கள் விடைத்தாளில் தங்களது பெயர், தேர்வுத் துறையால் வழங்கப்பட்ட பதிவெண் முதலியவை கட்டாயம் இடம்பெற செய்ய வேண்டும். ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ் அப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும்.
அந்தக் குழுவில் வினாத்தாள் மற்றும் விடைத்தாள் தவிர வேறு செய்திகள், வீடியோக்கள் உள்ளிட்ட எந்த தகவலும் பதிவிடவோ, பரிமாறவோ கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நாளை (மே 20) துவக்கம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்