கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 25 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதனையடுத்து கொரோனா வைரஸ் பரவலை தடுத்திட ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் தினசரி இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்கனவே 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இருப்பினும் பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தற்போது 10 முதல் 12 வரையிலான வகுப்புகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி வரும் 31ஆம் தேதி வரை 10, 11 மற்றும் 12 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதனையடுத்து, வரும் 19 அன்று தொடங்கி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்துவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.