கடந்த 10 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து, சென்னையில் இன்று (31.3.2022) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 107 ரூபாய் 45 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

ஒன்றிய பாஜக அரசு ஆட்சி அமைத்தபிறகு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது. இதற்கிடையே உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக விலை உயர்த்தப்படவில்லை.

இந்நிலையில் 137 நாட்களுக்கு பிறகு கடந்த வாரம் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதால் வாகன ஓட்டிகள், இல்லத்தரசிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்து வரலாறு காணாத உயர்வை கண்டுள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று காலை பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 107.45 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் 76 காசுகள் உயர்த்தப்பட்டு 97.52 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதற்கிடையே நேற்று மாநிலங்களவையில் நிதி மசோதா மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தற்போதைய பெட்ரோல் விலை உயர்வுக்கு கடந்தபோது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.