ஹிஜாப் விவகாரத்தில் மாணவர் சமூகம் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்து, இது தொடர்பான வழக்கை நாளை (9.2.2022) ஒத்திவைத்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக 6 மாணவிகளும் கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் முறையிட்டுள்ளனர்.
கர்நாடகாவில் பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணியும் விவகாரம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. அந்த மாநிலத்தின் இரு மாவட்டங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சிலர் காவித் துண்டு அணிந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கர்நாடக மாநிலம் ஷிமோகா நகரில் கல்லூரி வளாகத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசிய கொடியை அகற்றி விட்டு காவி நிற கொடியை ஒரு பிரிவு மாணவர் போராட்டக்குழு ஏற்றியது. பிறகு காவல்துறையினர் தலையிட்டு அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் ஷிவமோகாவில் மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேபோல் தாவண்கரே மாவட்டத்தில் காவித் துண்டு அணிந்துவந்த மாணவர்கள் கற்களை வீசி வாகனங்களுக்கு தீவைக்க முயன்றதால் வன்முறை தீவிரமானது. இதனால் வன்முறையில் ஈடுபட்ட கும்பலை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகாவில் ஹிஜாப் ஆதரவு மற்றும் எதிர்ப்பு மாணவர் குழுவினர் இடையே வன்முறை மற்றும் மோதல்கள் வெடித்ததையடுத்து, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மூன்று நாட்களுக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.
ஹிஜாப் விவகாரத்தில் எதிர்வினை என்ற பெயரில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று (8.2.2022) விசாரணைக்கு வந்தது. பல்வேறு நபர்கள் தொடுத்த வழக்கின் அடிப்படையில் நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித் தலைமையில் விசாரணை நடந்தது.
அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், “ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதத்தின் இன்றியமையாத பகுதியாகும். அதேபோல் ஒருவர் என்ன உடை அணிவது என்பது தனியுரிமைக்கான உரிமையின் ஒரு பகுதியாகும். கல்வி நிறுவனங்களில் ஹிஜாப், சிலுவைகள் போன்றவை நேர்மறை மதச்சார்பின்மையின் பிரதிபலிப்பு ஆகும்.
சில நாடுகள் எதிர்மறை மதச்சார்பின்மை என்ற கருத்தைப் பின்பற்றுகின்றன. இது மத அடையாளத்தை பொதுவில் காட்ட அனுமதிக்காது. இந்தியாவில் கடைபிடிக்கும் மதச்சார்பின்மை நேர்மறையான மதச்சார்பின்மை. நமது மதச்சார்பின்மை மரியாதை அடிப்படையிலானது. அரசு அனைத்து மதங்களையும் மதிக்கிறது.
பிராமணர்கள் இந்து மத அடையாளங்களுடன் பள்ளிக்குச் செல்கிறார்கள். அது பொது ஒழுங்கை பாதிக்கும் என்று ஒரு பள்ளி சொல்ல முடியுமா அல்லது சீக்கியர் அணிந்திருக்கும் தலைப்பாகை பொது ஒழுங்கை பாதிக்கிறது என்று அரசால் கூற முடியுமா? இஸ்லாமிய நம்பிக்கையின் ஒரு பகுதிதான் ஹிஜாப்” என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீட்சித், “எல்லா உணர்ச்சிகளையும் ஒதுக்கி வையுங்கள். அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி நடப்போம். அரசியலமைப்பு சட்டம் எனக்கு பகவத் கீதை போன்றது. அரசியலமைப்பு சட்டத்தின் மீது நான் சத்திய பிரமாணம் செய்துள்ளேன். அந்த சத்தியத்தின்படி நடப்பேன். நாளை அனைவரும் வாதிடுவதற்கு அனுமதி கொடுக்கப்படும்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மாணவர் சமூகம் அமைதியைப் பேண வேண்டும். பொது மக்களின் நல்லொழுக்கத்தில் முழு நம்பிக்கை உள்ளது. அதுவே நடைமுறைப்படுத்தப்படும் என்று நம்புகிறேன்.
போராட்டம் நடத்துவது, வீதியில் செல்வது, கோஷம் எழுப்புவது, மாணவர்களைத் தாக்குவது, மாணவர்கள் பிறரைத் தாக்குவது, இவையெல்லாம் நல்லதல்ல. டிவியில் நெருப்பையும் ரத்தத்தையும் பார்த்தாலே நீதிபதிகள் மனம் கலங்குவார்கள். மனம் கலங்கினால் புத்தி வேலை செய்யாது. நான் நாளை இந்த வழக்கை விசாரிப்பேன். அமைதியாக இருங்கள்” என்று தெரிவித்தார்.