ஸ்மாா்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஒன்ப்ளஸ் நிறுவனம் தற்போது இந்தியாவில் ஸ்மாா்ட் டிவி விற்பனையிலும் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஒன்ப்ளஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பீட் லாவ் திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், நிறுவனத்தின் வா்த்தகத்தை உலகம் முழுமைக்கும் கொண்டு சோக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக தற்போது குறைந்த விலை ஸ்மாா்ட் டிவி தயாரிப்புகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஸ்மாா்ட் டிவி தயாரிப்பில் களமிறங்கியது. அப்போது, 55 அங்குல ஸ்மாா்ட் டிவி இரண்டு மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டு, அவற்றின் விலை ரூ.69,900 மற்றும் 99,990-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது குறைந்த விலை ஸ்மாா்ட் டிவிக்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதில் நிறுவனம் தீவிரமாக களமிறங்கியுள்ளது. வரும் ஜூலை 2-ஆம் தேதி நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மாா்ட் டிவி தயாரிப்புகள் அறிமுகமாக உள்ளன என்று ஒன்ப்ளஸ் தெரிவித்துள்ளது.
ஒன்ப்ளஸ் ஸ்மாா்ட் டிவி வருகை ஏற்கெனவே குறைந்த விலை ஸ்மாா்ட் டிவி பிரிவில் உள்ள ஜியோமி மற்றும் ரியல்மி நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.