ஊரடங்கு காலத்தில் பிஸ்கட் விற்பனையில் சாதனை படைத்துள்ளது பார்லே ஜி.

90s.கிட்ஸ்களின் விருப்பமான பிஸ்கட் எனக் கூறும் அளவுக்கு சிறுவர்கள் மத்தியில் பிரபலமானது பார்லே ஜி பிஸ்கட். சக்திமான் ஸ்டிக்கரை வாங்குவதற்காகவே பார்லே ஜி பிஸ்கட்டை வாங்கிய சிறுவர்கள் ஏராளம். இப்போதும் பார்லே ஜி பிஸ்கட்களுக்கு சிறுவர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம்தான்.

ஒரு பாக்கெட் விலை 5 ரூபாய் என்பதால் சிறுவர்கள் மட்டுமல்லாமல் ஏழை எளிய மக்களும் எளிதில் வாங்கக் கூடிய ஒன்றாக இந்த பிஸ்கட்கள் உள்ளன. மார்ச் மாதத்தில் ஊரடங்கு தொடங்கிய பின்னர் பல்வேறு ஏழை எளிய குடும்பங்கள் உணவுக்கே வழியில்லாமல் தவித்தனர்.

குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது நடை பயணத்தில் பிஸ்கட்களையே உணவாக உண்டுள்ளனர். அந்த நேரத்தில் அவர்களது பசியைப் போக்க உதவிய ஒரு சில உணவுப் பொருட்களில் மிக முக்கியமானவை பிஸ்கட்டுகள். அதிலும் குறிப்பாக பார்லே பிஸ்கட்டுகள் விலை குறைவு என்பதால் அதிகமானோர் வாங்கியுள்ளனர்.

இதனால் 1938 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் பார்லே ஜி இந்த லாக்டவுனின் போது அதிகபட்ச எண்ணிக்கையிலான பிஸ்கட்டுகளை விற்கும் தனித்துவமான மைல்கல்லை எட்டி இருக்கிறது. மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மிகச் சிறந்த விற்பனை நடைபெற்றிருப்பதை அதன் நிர்வாகிகள் உறுதிப்படுத்தினர்.

இதுகுறித்து பேசிய பார்லே தயாரிப்புகளின் பிரிவுத் தலைவர் மயங்க் ஷா, நாங்கள் எங்கள் ஒட்டுமொத்த சந்தைப் பங்கை கிட்டத்தட்ட 5% உயர்த்தியுள்ளோம் . அதில், 90% பங்களிப்பை பார்லே ஜி பிஸ்கட்கள் கொண்டிருப்பதாகவும், இதற்கு முன்பு இது பேன்று இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நுகர்வோர் கிடைக்கக்கூடியதை தங்கள் வசதிக்கு ஏற்ப வாங்கிக் கொண்டனர் என்றும், பார்லேவின் மற்ற தயாரிப்புகள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் விற்பனையாகி இருக்கின்றன என்றும் கூறியுள்ளார். பார்லே தயாரிப்புகள் நாடு முழுவதும் 130 தொழிற்சாலைகளில் தங்கள் பிஸ்கட்டுகளை உருவாக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: ஸ்மாா்ட் டிவி, ஸ்மாா்ட் விலை… இந்தியாவில் களமிறங்கிய ஒன்ப்ளஸ்