பெகாஸஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியாவைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள், முன்னணி ஊடகவியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரின் செல்போன் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவன பெகாஸஸ் சாப்ட்வேர் மூலம் செல்போன் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பார்பிட்டன் என்ற ஊடக நிறுவனத்துடன் இணைந்து தி வயர், வாஷிங்டன் போஸ், கார்டியன் உள்ளிட்ட 17 ஊடக நிறுவனங்கள் இணைந்து ஆய்வு மேற்கொண்டன.
பிரபல ஊடக நிறுவனங்கள் மேற்கொண்ட இந்த ஆய்வில் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனத்திடம் வேவு பார்ப்பதற்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் இருந்துள்ளது.
இவற்றில் பெரும்பாலானவை இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, மெக்சிகோ, ஹங்கேரி பஹ்ரைன் உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்தவை என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியாவை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரின் செல்போன் எண்களும் இந்த கண்காணிக்கப்படும் பட்டியலில் உள்ளன.
இதில் 2 அமைச்சர்கள் 3 எதிர்க்கட்சி தலைவர்கள் 40க்கும் அதிகமான பத்திரிகையாளர்கள், நீதிபதி ஆகியோரின் எண்களும், சமூக ஆர்வலர்கள் எண்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் மொபைல் போன் தரவுகளும் வேவுபார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொருவரின் செல்போனும் சில பிரத்யேக காரணங்களுக்காகக் குறிவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தி வயர் ஊடகத்தின் ஆசிரியரான ரோகினி சிங்கின் செல்போன், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்தும், அவரது மகன் ஜெய்ஷா மற்றும் பிரதமர் மோடியுடன் இணக்கமாக இருந்து வந்த தொழிலதிபர் நிகில் ஆகியோர் இடையேயான வணிக விவகாரங்கள் குறித்து தி வயர் தளத்தில் எழுதிய பிறகு, கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.
[su_image_carousel source=”media: 25145,25146″ crop=”none” columns=”2″ captions=”yes” autoplay=”1″ image_size=”full”]
2019 இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 2018 ஆம் ஆண்டு முதலே பத்திரிகையாளர்களின் செல்போன் தரவுகள் மற்றும் உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. பெகாசஸ் ஸ்பைவேரை வடிவமைத்த என்.எஸ்.ஓ நிறுவனம் தாங்கள் ஸ்பைவேரை, சட்டவிரோத செயல்களை தடுக்கும் நோக்கில் அரசாங்க அமைப்புகளுக்கு மட்டுமே விற்பனை செய்ததாகத் தெரிவித்துள்ளது.
இந்த செல்போன் எண்கள் வேவு பார்க்கப்பட்டவையா என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வு தொடர்வதாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதேவேளையில், செல்போன்கள் வேவு பார்க்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஒன்றிய அரசு, தனிநபர் ரகசியம் என்பது அடிப்படை உரிமை என்பதால் அது காக்கப்பட வேண்டும் என்பதில் ஒன்றிய அரசு உறுதியாக உள்ளது. தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டு அரசு நிறுவனங்களை களங்கப்படுத்தும் நோக்கில் எழுப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தடுப்பூசி விலையை உயர்த்தி ஒன்றிய மோடி அரசு ஒப்பந்தம்; கோவிஷீல்டு ரூ.215, கோவாக்சின் ரூ.225