தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியான அலுவலக பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் செல்லாம் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்ததையடுத்து ஆலை மூடப்பட்டது. இதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் உள்நோக்கம் உள்ளதால், ஆலையால் மாசு ஏற்படுகிறதா என்பதை ஆராய குழு அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.
மேலும் இதுவரை ஸ்டெர்லைட் ஆலையில் காப்பர் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், ஆலை மூடப்பட்டதால் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து காப்பரை இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம், எனவே ஆலையை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என வேதாந்தா குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
ஆனால் தமிழக அரசின் வாதத்தை நிராகரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஆலையை திறக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி வேதாந்தா குழுமம் சார்பில் தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது. நிர்வாக பணிகளை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆலையை இயக்க அனுமதியில்லை என தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உற்பத்தி, பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள கூடாது என பசுமை தீர்பாயம் கூறியுள்ளது.
இதனிடையே ஆலையின் கழிவால் நீர் மாசு அடைந்ததற்கான புகைப்பட ஆதாரத்தை தமிழக அரசு சமர்ப்பித்தது. அலுவலக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும் ஆலையில் உள்ள ஆவணங்களை அழிக்க வாய்ப்புள்ளதால் ஆலைக்குள் அதிகாரிகளை அனுமதிக்க கூடாது என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
ஆனால் ஆலையை ஆய்வு செய்ய மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அந்த குழுவில் மாசுக்கட்டுப்பாட்டு பிரதிநிதியை சேர்க்க வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ஆலையை ஆய்வு செய்து ஆகஸ்ட் 20க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.