டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விவசாயிகளுக்குத் துரோகம் செய்ய முடியாது எனக் கூறி, சட்டப்பேரவையில் வேளாண் சட்ட நகல்களைக் கிழித்து எறிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 22வது நாளாக தொடருகிறது. கடும் பனி, குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றமும் விவசாயிகள் போராட உரிமை உள்ளது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தக் கூடாது என கருத்து தெரிவித்துள்ளது. ஆனால் வேளான் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 17) நடைபெற்ற டெல்லி சட்டசபையில் மத்திய அரசின் விவசாய சட்டங்களை நிராகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசை கடுமையாக விமர்சித்து விவசாய சட்டங்களின் நகல்களை சட்டசபையிலேயே கிழித்து எறிந்தார்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிய பின் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “மத்திய அரசின் விவசாய சட்டங்களை கிழித்து எறிகிறேன். மேலும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களைவிட மோசமானவர்களாக மத்திய ஆட்சியாளர்கள் மாறிவிடக் கூடாது எனவும் வேண்டுகோள் வைக்கிறேன். கொரோனா காலத்தில் விவசாய சட்டங்களை அவசர கதியில் கொண்டுவர வேண்டிய தேவை என்ன?
நாட்டின் ஒவ்வொரு விவசாயியும் இப்போது பகத்சிங்காக உருவாகி இருக்கின்றனர். ஆனால் மத்திய அரசோ, புதிய விவசாய சட்டங்களின் நன்மைகள் தொடர்பாக விவசாயிகளிடம் எடுத்துரைப்போம் என பேசி வருகிறது. உத்தரப்பிரதேசத்தின் முதல்வரோ விவசாயிகளிடம் உங்கள் நிலங்கள் கையகப்படுத்தப்படமாட்டாது என்கிறார். இதுதான் விவசாயிகளுக்கு கிடைக்கப் போகும் நன்மையா?
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் சீக்கிய மதகுரு உட்பட இதுவரை 20 பேர் மரணம் அடைந்துவிட்டனர். அதாவது நாள்தோறும் ஒருவர் வீதம் உயிரை தியாகம் செய்து வருகின்றனர். இன்னமும் எத்தனை உயிர்கள்தான் உங்களுக்கு வேண்டுமோ?” ஆவேசமாக கேள்வி எழுப்பினார். முன்னதாக ஆம் ஆத்மி எம்எல்ஏக்களும் விவசாய சட்ட நகல்களை சட்டசபையில் கிழித்து எறிந்து எதிர்ப்பை காட்டினர்.
விவசாயிகள் பிரச்சனையை தீர்க்க தேசிய அளவில் குழு- உச்சநீதிமன்றம் ஆலோசனை