மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களை திரும்பபெறக் கோரி டெல்லியில் போராடும் விவசாயிகள் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வுகாணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
வேளாண் சட்டத்திற்கு ஆதரவளிப்போர், எதிர்ப்போர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இந்த குழு முன் ஆஜராகி தங்கள் தரப்பு கோரிக்கைகளை முன் வைக்க வாய்ப்பளித்திருக்கும் உச்சநீதிமன்றம், குழுவின் பரிந்துரை வரும் வரை வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை நிறுத்திவைக்குமாறு அரசுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.
உச்சநீதிமன்றம் நியமித்த நால்வர் குழுவின் உறுப்பினர்கள் விவரங்கள்:
1) பாரதிய கிசான் யூனியன் பூபிந்தர் சிங் மான்
2) விவசாய பொருளாதார நிபுணர் பிரமோத் குமார் ஜோஷி
3) அசோக் குலாட்டி
4) மகாராஷ்டிரா ஷெத்கரி சங்கத்னாவின் (Shetkari Sanghatana) தலைவர் அனில் கன்வத்
இந்த உறுப்பினர்களின் சமீப கால கருத்துகள்:
பூபிந்தர் சிங் மான்: இவர் பஞ்சாப்பை சார்ந்த பெரும் பணக்கார விவசாயி. பாரதீய கிசான் சங்க தலைவர். அனைத்து விவசாய சங்க போராட்டக் குழுவில் தனது சங்கத்தின் ஒட்டு மொத்த பிரதிநிதி. மோடி அரசின் வேளாண் சட்டத்தை ஆதரித்து, வேளாள் சட்டங்களில் சில திருத்தங்கள் செய்தால் போனது என கடந்த மாதம் வேளாண்துறை அமைச்சர் தோமருக்கு கடிதம் எழுதியவர்.
பிரமோத் குமார் ஜோஷி: அரசு மட்டுமே விவசாயத்துறையில் இருக்கக்கூடாது. கார்ப்ரேட்டுகளும் இருந்தால் லாபம் பெற முடியும்.ஆதலால் வேளாண்துறை சார்ந்த நிலைகளில் தனியாரை தீவிரமாக ஆதரிப்பவர்.
மேலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு அடிபணிந்து, வேளாண் சட்டங்களில் சிறு திருத்தம் செய்தாலும் கூட அது இந்திய விவசாயத்தை பாதிப்பதோடு, உலக அளவில் குவிந்து வரும் வாய்ப்புகள் கைநழுவிப்போகும் என்று தனியார் இதழில் எழுதி இருக்கிறார்.
அசோக் குலாட்டி: அரசு சரியான திசையில் சென்று கொண்டுள்ளது. புதிய வேளாண் சட்டத்தை விவசாயிகள் புரிந்து கொள்ளாமல் போராடுகின்றார்கள். அவர்களுக்கு புரியும் வகையில் இந்த சட்டத்தை எடுத்து சொல்லி ஆதரிக்க செய்ய வேண்டும் என்று கூறி, மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டத்திற்கு ஆதரவாக சமீப காலமாக பேசிக்கொண்டு வருபவர்.
அனில் கன்வத்: மத்திய அரசு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக வேளாண் சட்டத்தை கொண்டு வந்தவுடன், நேரிடையாக விவசாயத்துறை அமைச்சரை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தவர்.
மேலும் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோருவது தேவையற்றது, மாறாக சில திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்து, வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக மகாராஷ்டிரா ஷெத்கரி சங்கத்னாவின் சார்பில் பேரணியும் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கூறிய உச்சநீதிமன்றம் அமைத்துள்ள நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ள 4 பேரும், வேளாண் சட்டங்களை ஆதரித்து பேசி வந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் யாருடைய நலனுக்காக உச்சநீதிமன்றம் பரிசீலனை குழுவை நியமித்தது, வேளாண் சட்டங்களை ஆதரித்து பேசி வந்தவர்கள் எவ்வாறு விவசாயிகளின் நியாயமான வாழ்வாதார கோரிக்கைகளை புரிந்து கொள்ள முடியும் என்று விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை; 4 பேர் குழு அமைப்பு- உச்சநீதிமன்றம்