காவல்துறையில் பெண் காவலர்கள் அதிகாரிகள் குறித்து அளிக்கும் பாலியல் புகார்களை விசாரிக்க கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் கூடுதல் டிஜிபி அருணாச்சலம் டிஐஜி தேன்மொழி ஓய்வு பெற்ற எஸ்பி சரஸ்வதி தலைமையில் குழுவை அமைத்து கடந்த 17-ம் தேதி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இந்த கமிட்டியில் உயர் பதவியில் இருக்கும் பெண் அதிகாரிகள் முதல் கடை நிலை பெண் போலீசார் வரை உள்ள பெண் காவலர்கள் அனைவரும் இந்த கமிட்டியில் தங்கள் பணியின் போது உயர் அதிகாரிகளால் ஏற்படும் பாலியல் தொந்தரவு தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.
பாலியல் புகார் குறித்து விசாரிக்க காவல்துறையில் அமைக்கப்பட்டுள்ள விசாகா குழுவை மாற்றி அமைக்க கோரிய வழக்கை வேறு ஒரு அமர்வுக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த குழு சட்டப்படி அமைக்கப்படவில்லை என்று புகார் கூறி சென்னை சூளைமேட்டை சேர்ந்த வழக்கறிஞர் பிரேமானந்த் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். விசாகா குழுவில் பெண்கள் அமைப்பு, தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த குழு உயரதிகாரிகளை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டிருப்பதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். தலைமை நீதிபதி தகில் ரமணி நீதிபதி துரைசாமி அடங்கிய மனு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை வேறு ஒரு அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
முன்னதாக அரசு அலுவலகங்களில் கூட பாலியல் தொல்லை இருக்கும் சூழலில் தமிழக காவல்துறையில், உழைக்கும் மகளிர் பாதுகாப்புக்கான விசாகா கமிட்டி இல்லை என்ற தகவலை அறிந்து தான் அதிர்ச்சி அடைந்ததாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பதிவிட்டுள்ளார்
பணி இடங்களில் பெண்கள் பாதுகாப்புக்காக விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என்று 1997ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மத்திய அரசு பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் தடுப்புச் சட்டத்தை 2013ம் ஆண்டு செயல்படுத்தியது.
ஆனால் தமிழகத்தில், சட்டத்தை அமல்படுத்த வேண்டிய காவல்துறையிலேயே விசாகா கமிட்டி இல்லை என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறையிலேயே பெண்களின் பாலியல் புகார்களை விசாரிக்க விஷாகா கமிட்டி இல்லை என்பது, அவமானகரமானது. அங்கு பணியாற்றும் பெண்கள் எவ்வாறு தங்களது பாதுகாப்பை உறுதிபடுத்திக்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.