வீட்டிலிருந்தே மாணவர்கள் பாடங்களைக் கற்கும் வகையில் புதிய இணையதளம் ஒன்றை தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் ஐந்தாம் கட்ட பொது முடக்கம் பல்வேறு தளர்வுகளுடன் UNLOCK1.0 என்ற பெயரில் வருகிற 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளிகள், கல்லூரிகள் உள்பட கல்வி நிறுவனங்கள் எப்போது திறக்கப்படும் என்பது கேள்விக் குறியாக உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, கொரோனா வைரஸ் பிரச்சினைகள் முடிந்த பிறகு மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட பின், பள்ளிகளை திறப்பது குறித்து ஒரு குழு அமைத்து ஆய்வு மேற்கொண்ட பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மாணவர் சேர்க்கைக்கான எந்த விதமான பணிகளையும் மேற்கொள்ள கூடாது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. எனினும், ஆன்லைன் மூலம் தனியார் பள்ளிகள் வகுப்புகளை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், மாணவர்களின் நலன்கருதி வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்கும் வகையில் புதிய இணையதளம் ஒன்றை பள்ளி கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. http://e-learn.tnschools.gov.in என்ற இணையதளத்தில் வீடியோ மூலம் பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம். இதில் 1 ஆம் வகுப்பு முதல் தமிழ், ஆங்கில வழியில் பாடங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுவருகின்றன.
மேலும் வாசிக்க: கோவிட் -19 மருத்துவம்: ஆயுஷ் அமைச்சகத்தால் எச்சரிக்கப்பட்ட பதஞ்சலி