சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் இரட்டைக் கொலை வழக்கில் தடயங்களை மறைக்க போலீசார் முயற்சி செய்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு சிறையின் அடைக்கப்பட்ட பின்னர் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்பேரில், விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் சாத்தான்குளம், கோவில்பட்டி சென்று விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தந்தை,மகன் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. அதில் முதல் குற்றவாளியாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதரும், அவரைத் தொடர்ந்து எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், எஸ்.ஐ.ரகுகணேஷ், போலீசார்கள் முருகன், சாமதுரை, முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ் மற்றும் வெயிலுமுத்து ஆகியோர் வரிசையாக குற்றவாளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. பால்துரை மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததால் அவரை குற்றவாளியாக சேர்க்கவில்லை.

மேலும் சிபிஐ அறிக்கையில், சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் காவல் நிலையத்தின் அறையில் ஆடைகளை களைந்து, மேஜை மீது குனிய வைத்து பின்புறத்தில் காவலர்கள் மிருகத்தனமான தாக்குதலை மேற்கொண்டதால் உயிரிழந்தனர்.

காவல் நிலையத்தின் கழிப்பறை, சுவர்கள், லத்தி, மேஜைகள் என பல்வேறு இடங்களில் கிடைத்த ரத்தமாதிரிகள் உயிரிழந்த 2 பேரின் டிஎன்ஏ உடன் ஒத்துப்போகிறது என்றும் அவர்கள் சிந்திய ரத்தத்தை அவர்களையே துடைக்கச் சொல்லி துன்புறுத்தப்பட்டதாகவும், அதிக ரத்தக்கசிவு இருந்ததால் இரண்டு முறை உடை மாற்றப்பட்டுள்ளது என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.

மேலும் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் ரத்தம் படிந்த துணிகளை தூய்மைப்படுத்தி தடயங்களை மறைக்க போலீசார் முயற்சி செய்துள்ளனர். தந்தை, மகன் இருவருக்கும் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இருப்பதை குறிப்பிடாமல் சிறையில் இருக்க தகுதி என மருத்துவர் வெண்ணிலா அலட்சியமாக சான்று அளித்ததாகவும், சிறையில் அடைக்கும் போதே அவர்களின் உடல்களில் காயங்கள் இருந்தது என்றும் சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுஸ்மிருதி மேட்டரில் காயத்ரியின் அதிங்கபிரசிங்கியான பதிவால் கணக்கை முடக்கி ட்வீட்டர் அதிரடி