கட்டிடம் மற்றும் மனைப்பிரிவு விதிகளானது, மனைப்பிரிவுகளை நெறிமுறைப்படுத்தவும், கட்டிடங்களின் அமைப்பு, உயரம், கட்டுமான பரப்பு, வடிவமைப்பு உள்ளிட்ட கட்டுமானம் தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஒழுங்குபடுத்தி, முறையான திட்டமிட்ட இருப்பிடங்கள் அமைவதற்கு உதவுகின்றன.
 
தற்போது தமிழ்நாட்டில், மனைப்பிரிவு மற்றும் கட்டிடத்திற்கு தேவையான அனுமதி பெறுவதற்கான விதிகள், தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டம் 1971, சென்னை மாநகராட்சி சட்டம் 1919, தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994 மற்றும் பிற மாநகராட்சிகளுக்கான சட்டங்களில் தனித்தனியாக உள்ளன.
 
இந்த விதிகளை எல்லாம் ஒருங்கிணைத்து ஒரே தொகுப்பாக மாற்ற தமிழக அரசு முடிவெடுத்து, அதன்படி, தமிழ்நாடு ஒருங்கிணைக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள்-2019 உருவாக்கப்பட்டுள்ளது.
 
இந்த புதிய விதிகளின் மூலம், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளில் ஒன்றான வீட்டுவசதியை அனைவரும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில், வீடு கட்டுவதற்காக அனுமதிக்கப்படும் தளப்பரப்பளவு உயர்த்தப்பட்டுள்ளது.
 
மேலும், பக்க இடைவெளிகள் குறைக்கப்பட்டு, கட்டிடத்தின் உயரமும், தளங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. விதிமீறல்களை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்து அவைகளை தவிர்க்கும் வகையிலும் இந்த பொது விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
 
புதிய விதிகளின்படி விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் முறைகள் எளிமையாக்கப்பட்டு, விரைவில் கட்டிட அனுமதி அளிக்கும் வகையில் விதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
 
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை ஆகிய துறைகளால் தயாரிக்கப்பட்ட `தமிழ்நாடு ஒருங்கிணைக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் – 2019’ புத்தகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் நேற்று வெளியிட, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.