நடிகர் சங்க தேர்தல் ஜூன். 23ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வீடியோ ஒன்றை வெளியிட்ட விஷாலை வரலட்சுமி சரத்குமார் ட்விட்டரில் கடுமையாக தாக்கியுள்ளார்.
நடிகர் சங்கத் தேர்தல் பரப்பரப்பான நிலையை எட்டியுள்ள நிலையில் நாசர் தலமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும் பிரச்சாரத்தை துவங்கியுள்ளனர். இரு அணியினரும் தங்களுக்கு ஆதரவு வேண்டி மூத்த நடிகர்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சங்கத் தேர்தல் குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் பற்றி கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் வரலட்சுமி சரத்குமார், விஷாலை தாக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அன்புக்குரிய விஷால் சமீபத்தில் வெளியான வீடியோவைப் பார்த்தேன். நீங்கள் எவ்வளவு கீழிறங்கி விட்டீர்கள் என்று தெரிகிறது. உங்கள் மீது இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விட்டது.
எந்த வித ஆதாரமும் இல்லாமல் என் அப்பாவை குற்றம் சொல்வது சரியல்ல. சட்டம் தான் உயர்ந்தது என்று நீங்கள் கூறி வருகிறீர்கள் என் தந்தை குற்றவாளியென்றால் அவருக்கு இந்நேரம் தண்டனை கிடைத்திருக்கும். இந்த முறை நான் உங்களை தவறு சொல்ல மாட்டேன். நீங்கள் வளர்ந்த விதமே அப்படித்தான். நீங்கள் எவ்வளவு கீழ்த்தரமானவர் என்று தெரிகிறது. உங்களுடைய பொய்களையும், இரட்டை வேடத்தையும் அனைவருமே அறிவார்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் எனது ஓட்டை இழந்து விட்டீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தை நேற்று சந்தித்து ஆதரவு கோரினார். விஜயகாந்தை சந்தித்தபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,
பாக்யராஜ் சார், தயவு செய்து காவி வேட்டி கட்டி பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டாம். அது உங்களுக்கு எதிராக திரும்பிவிடும். உங்கள் அணிக்கு பெரிய கட்சியின் ஆதரவு இருக்கும் என்று பேச்சு கிளம்பியுள்ள நிலையில் காவி வேட்டியை தவிர்ப்பவது உங்களுக்கு நல்லது.
கேப்டனுடன் இருக்கும் புகைப்படத்தில் இருக்கும் பாஜக கட்சியை சார்ந்த காயத்ரி ரகுராமை குறிப்பிட்டு, அவர் உங்கள் அணியில் இருந்தால் உங்கள் அணியை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும். அந்த லேடி ஊரில் உள்ளவர்களை எல்லாம் விளாசி அனைவரின் எதிர்ப்பையும் சம்பாதித்து வைத்துள்ளார். அதனால் அவர் சாவகாசம் வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.